Published : 27 Oct 2024 05:45 PM
Last Updated : 27 Oct 2024 05:45 PM
மதுரை: நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய் தான் முடிவெடுக்க வேண்டும் என மதுரையில் சீமான் கூறினார்.
மருதுபாண்டியர்கள் குருபூஜையை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விக்ரவாண்டியில் விஜய் நடத்தும் தவெக மாநாடு மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். ஏனெனில் புதிதாக அரசியல் கட்சி தொடங்கும் போது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாங்கள் கட்சி தொடங்கும் போது இந்தளவு ஆதரவு இருக்கவில்லை. திரை உலக புகழில் இருக்கும் போது மக்களிடம் வீச்சும், ரீச்சும் அதிகம் இருக்கும். எங்களுக்கு அப்படியில்லை.
மருதுபாண்டியர்களின் பெருமையை மூடி மறைக்கும் வகையில் இந்த நாளை மாநாட்டுக்கு விஜய் தேர்வு செய்திருக்கமாட்டார். அப்படியெல்லாம் செய்ற ஆள் விஜய் அல்ல. விஜய்யை பற்றி எனக்கு நன்றாக தெரியும். தவெக மாநாட்டு பேனரில் அண்ணா, பிரபாகரன் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. சேர, சோழ, பாண்டியர்களின் பேரன் தான் அண்ணா என நினைத்தும். வேலுநாச்சியாரின் பேரன் தான் பிரபாகரன் என நினைத்து இருவரின் புகைப்படங்களை விட்டிருக்கலாம். பிரபாகரனை நான் வைத்திருக்கிறேன் என நினைத்து கூட விட்டிருக்கலாம். கட்-அவுட் வைப்பது மட்டும் அரசியல் அல்ல. கருத்தியல் தான் அரசியல்.
நாம் தமிழர் கட்சி கொடி நிறத்தை தான் தவெக கொடியும் அமைந்துள்ளது. நாங்கள் புலியை வைத்திருக்கிறோம், அவர் யானையை வைத்திருக்கிறார். நம்மிடம் யானைப்படை தான் இருந்தது. வெள்ளைக்காரன் வந்த பிறகு தான் குதிரைப்படை வந்தது. நமக்கு யானை தான். அதனால் அதை விஜய் வைத்துள்ளார்.
இதுவரை வந்த கட்சிகளும் திராவிட அடையாளமான கருப்பு சிவப்பை பயன்படுத்தி வந்தன. தற்போது இது சிவப்பு மஞ்சளாக மாறியிருக்கிறது. ஒரே கொள்கை கொண்டுள்ளவர்கள் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில்லை. தவெக - நாதக கூட்டணி ஏற்படுமா? என்பதை காலம் தான் தீர்மானிக்கும். இது குறித்து விஜய் முடிவெடுக்க வேண்டும்.
தவெக மாநாட்டு நாளில் பிரேமலதா தேமுதிக மாநாடு குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது அவருக்கு பெருமையா என்பது தெரியவில்லை. இருப்பினும் அவர் சொல்வதில் உண்மை உள்ளது. மதுரையில் விஜய்காந்திற்காக உண்மையில் மக்கள் கூடினர். அதை மறுக்க முடியாது.
விஜய்யை பார்க்க வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மதுரையில் குறைவாகவே மழை பெய்துள்ளது. இருந்தும் பாதிப்பு அதிகமாக உள்ளது. அரசு எல்லா மாவட்டங்களையும் ஒரே மாதிரி கவனத்தில் கொள்வதில்லை. இவ்வாறு சீமான் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT