Last Updated : 27 Oct, 2024 05:31 PM

 

Published : 27 Oct 2024 05:31 PM
Last Updated : 27 Oct 2024 05:31 PM

தீபாவளி: தி.நகர் உள்ளிட்ட வணிக வீதிகளில் கண்காணிப்புப் பணியில் 18 ஆயிரம் போலீஸார்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க நேற்று தி.நகர் உட்பட வணிக வீதிகளில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் சென்னையில் இன்று 18 ஆயிரம் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்று கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் புத்தாடை, நகை, பட்டாசு வாங்க வணிக வீதிகளில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் குவிந்தனர். குறிப்பாக தியாகராயநகர் ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், மயிலாப்பூர், பாரிமுனை, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு வணிக வீதிகளில் உள்ள கடைகளில் மக்கள் அதிகளவில் திரண்டிருந்தனர்.

இதை எதிர்பார்த்து சென்னை காவல் ஆணையர் அருண், முன்கூட்டியே விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், குற்றங்களை தடுத்தல், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குப்படுத்துதல் ஆகிய 3 பணிகளாக பிரித்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அனைத்து இடங்களிலும் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஊர்க்காவல் படை வீரர்கள் என 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நெரிசலை கட்டுப்படுத்த தியாகராயநகரில் 7, வண்ணாரப்பேட்டையில் 3, புரசைவாக்கத்தில் 3, பூக்கடையில் 4 என 17 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதன் மீது நின்றவாறு கண்காணிப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்தது. இங்கு போலீஸார் சுழற்சி முறையிலும், நேரடியாகவும், 21 பைனாகுலர்கள் மூலம் கண்காணித்தனர்.

மேலும், ஒலி பெருக்கிகள் மூலம் திருட்டு குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் அறிவுரைகளும் வழங்கப்பட்டது. தியாகராயநகர், பாண்டி பஜார் பகுதிகளில் பெண்களின் கழுத்திலுள்ள தங்க நகைகள் திருடப்படாமல் தடுக்க கழுத்தில் துணிகளை சுற்றி கவசமாக கட்டிக் கொள்ள 10 ஆயிரம் துணி கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

தியாகராயநகர், வண்ணாரப்பேட்டையில் கூடுதலாக 42 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதேபோல தியாகராயநகர், வண்ணாராப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை பகுதிகளில் 5 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள், 10 தற்காலிக உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் நடமாட்டம் கண்காணித்தும், கூட்டத்தில் காணாமல் போகும் சிறுவர்கள், சிறுமியர்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தியாகராயநகர் கட்டுப்பாட்டு அறையை 73585 43058, என்ற கைப்பேசி எண் மூலமாகவும், புரசைவாக்கம் கட்டுப்பாட்டு அறையை 78248 67234 என்ற செல்போன் எண் மூலமாகவும், பூக்கடை கட்டுப்பாட்டு அறையை 81223 60906 என்ற செல்போன் எண் மூலமாகவும் தொடர்புகொள்ள பொது மக்களுக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

தியாகராயநகர், பூக்கடையில் வாகனங்கள் செல்ல இயலாத இடங்களிலும், கூட்ட நெரிசலான இடங்களிலும் 4 ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. பழைய குற்றவாளிகளின் முகம் அடையாளம் காணும் செயலி பதிவேற்றம் செய்து, செயலி மூலமும் கண்காணிக்கப்பட்டது. போலீஸார் குழுக்களாக பிரிந்து கண்காணித்தும், வாட்ஸப் குழு தொடங்கி முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன் பரிமாற்றம் செய்தும், குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

வணிக பகுதிகளில் போலீஸார் ஜீப்பிலும், இருசக்கர வாகனங்களிலும் ரோந்து சென்றனர். ஜவுளிக் கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் முன்பகுதியில் காவல் துறையின் நடமாடும் பேக்கேஜ் ஸ்கேனர் வாகனங்கள் மூலம் பொதுமக்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. கூட்டம் அதிகம் காணப்படும் பகுதிகளில் ஆண் போலீஸாரும், பெண் போலீஸாரும் சாதாரண உடையில் மாறுவேடத்தில் ரோந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x