Published : 27 Oct 2024 05:24 PM
Last Updated : 27 Oct 2024 05:24 PM

‘மதச்சார்பற்ற சமூக நீதி’ - தவெக கொள்கை பாடலில் விஜய் குரலில் ஒலித்த கட்சியின் கோட்பாடு

விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல் மாநாட்டு மேடையில் வெளியிடப்பட்டது. விஜய்யின் குரலிலேயே கட்சியின் கொள்கை விளக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் - விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை விளக்கப்படும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்திருந்தார். அது போலவே அனைவருக்கும் புரியும் வகையில் மாநாட்டு மேடையில் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. ஏற்கெனவே கொடி பாடல் வெளியாகி இருந்தது.

‘சாதி, மத, பேதங்களை நீக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்’, ‘சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவோம்’, ‘சமூக நீதி பாதையில் பயணிப்போம்’ போன்ற வரிகள் கொள்கை பாடலில் இடம்பெற்றுள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தலைப்பில் இந்தப் பாடல் வெளியாகி உள்ளது. ‘துப்பார்க்கு துப்பாய’ திருக்குறள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது முதல் கோட்பாடு. மதம், சாதி, இனம், மொழிக்குள் மனித சமூகத்தை சுருக்கக் கூடாது, மக்களை பாகுபடுத்தாமல் சம உரிமைகளை வழங்க வேண்டும், மாநில மற்றும் மத்திய அரசுகளின் மக்கள் விரோத செயல்களை எதிர்ப்போம், விகிதாச்சார இட ஒதுக்கீடே உண்மையான சமூக நீதி, எல்லா வகையிலும் ஆண்களுக்கு பெண்கள் சமம், இருமொழிக் கொள்கையே தவெக-வின் மொழிக் கொள்கையாகும், தமிழை வழக்காடு மொழி ஆக்குவது, பகுத்தறிவு சிந்தனைகள் வளர்ப்போம், பிற்போக்கு சிந்தனைகளை புறக்கணிப்போம், அரசு மற்றும் தனியார் துறையில் ஊழலற்ற நிர்வாகம், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்போம், போதையில்லா தமிழகம் படைப்போம் உள்ளிட்டவை தவெக-வின் அடிப்படை கொள்கைகளாக இருப்பது இப்பாடலின் மூலம் புலப்படுகிறது. இந்தப் பாடலில் விஜய் பேசுவதும் இடம்பெற்றுள்ளது. அதில் அவர் ‘மதச்சார்பற்ற சமூக நீதி’ கொள்கையோடு அரசியல் செய்ய வருகிறேன் எனக் கூறுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x