Published : 27 Oct 2024 04:45 PM
Last Updated : 27 Oct 2024 04:45 PM
விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடங்கியது. அக்கட்சியின் தலைவர் விஜய், மாநாட்டில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் - விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் இன்று (அக்.27) பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. மாநாடு தொடங்கியதும் அரங்கில் விஜய் திரைப்படங்களில் இடம்பெற்ற அரசியல் பேசும் பாடல்கள் இசைக்கப்பட்டன. பின்னர் தவெக கட்சியின் கொடிப் பாடல் இசைக்கப்பட்டது.
மாநாட்டுப் பந்தலில் இருந்த மேடையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் சோபனா அமர்ந்திருக்க, கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. இதனை தொடர்ந்து மாலை 4 .03க்கு மேடைக்கு வந்த கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு உற்சாகமாக வந்து தொண்டர்களைப்பார்த்து கையசைத்தார்.
பின்னர் 800 மீட்டர் நீளமுள்ள ரேம்பில் நடந்துவந்தார். அப்போது தொண்டர் ஒருவர் அவர்மீது வீசிய கட்சி துண்டை தன் தோளில் முதன் முதலாக அணிந்து கொண்டார். இதனை தொடர்ந்து தொண்டர்கள் வீசிய துண்டுகளை தன் தோளில் அணிந்து கொண்டார். தவறிய துண்டுகளை அவருடன் வந்த பவுன்சர்கள் சேகரித்தனர். பின்னர் மீண்டும் மேடைக்கு திரும்பிய விஜய் தன் தோளில் இருந்த கட்சி துண்டுகளை அங்கிருந்த டீபாயில் கவனமாக வைத்தார். ஒரே ஒரு துண்டை மட்டும் அணிந்து கொண்டார்.பின்னர் மேடையில் ஏறிய அவர் கண்கள் கலங்க கூட்டத்தைக் கண்டு கையசைத்தார்.
பின்னர் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். மாலை 4.21 மணியளவில் கட்சியின் கொடியை விஜய் ஏற்றிவைத்தார். மேடையில் இருந்தவாறே பட்டனை அழுத்தி அவர் கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து தவெக கொடிப் பாடல் இசைக்கப்பட்டது. அதன் பின்னர் கட்சி நிர்வாகிகள் மாநாட்டில் ஒவ்வொருவராக மேடையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர். தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன் பின்னர் உறுதிமொழி வாசிக்கப்பட தவெக தொண்டர்கள் உறுதிமொழியேற்றனர். தொடர்ந்து பொதுச் செயலாளர் ஆனந்த் உரையாற்றினார். அதனையடுத்து கட்சியின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது.
இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் என்ன பேச உள்ளார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனப் பேசப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT