Published : 27 Oct 2024 01:31 PM
Last Updated : 27 Oct 2024 01:31 PM

கில் நகர் பூங்காவில் பராமரிப்பு, பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக மக்கள் ஆதங்கம்

சென்னை மாநகராட்சி 9-வது மண்டலம் (தேனாம்பேட்டை), 109-வது வார்டில் அமைந்திருப்பது சூளைமேடு கில் நகர் பூங்கா. இந்த பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது (அப்போது மண்டலம் 5, வார்டு 76)அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி முன்னிலையில் 1998-ம் ஆண்டு மே 14-ம் தேதி திறந்து வைத்தார். கடந்த ஆண்டு இந்த பூங்கா வெள்ளிவிழா கண்டது.

இந்தாண்டு இப்பூங்கா புனரமைக்கப்பட்டுள்ளது. 109-வது வார்டு மாநகராட்சி காங்கிரஸ் உறுப்பினர் சுகன்யா செல்வம் இதற்கான முயற்சியை மேற்கொண்டார். அதன்படி, 2023-24-ம் ஆண்டு வார்டு மேம்பாட்டு நிதியில் இருந்து திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.2 லட்சத்தில் செயற்கை நீர்வீழ்ச்சி மறுகட்டமைப்பு செய்யப் பட்டிருக்கிறது. பூங்கா பராமரிப்பு நிதியில் இருந்து ரூ.32 லட்சம் செலவில் பூங்கா மேம்படுத்தப்பட்டு உள்ளது. ரூ.6.28 லட்சத்தில் பாதுகாவலர் அறை மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் பூங்கா புனரமைப்பு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டபோது பதிக்கப்பட்ட கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூங்காவுக்கு வரும் மக்களின் ஆரோக்கியத்துக்காக மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.18.07 லட்சத்தில் பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டு கடந்தாண்டு பிப்.3-ம் தேதி திறக்கப்பட்டது. பூங்கா பராமரிப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அதன் ஒப்பந்த காலம் கடந்தாண்டு ஆகஸ்டு 1 முதல் இந்தாண்டு ஜூலை 31-ம் தேதி வரை ஆகும். ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டதாலோ என்னவோ பூங்கா சரிவர பராமரிக்கப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இதுகுறித்து பூங்காவுக்கு நடைபயிற்சி வரும் பொதுமக்கள் கூறியதாவது: பூங்கா புனரமைப்புக்காக ரூ.44 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளனர். ஆனால், குப்பை தொட்டிகளை மாற்றவில்லை. இருக்கின்ற குப்பை தொட்டிகளும் அசுத்தமாகவும் உடைந்தும் காணப்படுகிறது. அவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்துப் போடும் வகையில் மாற்றியிருக்கலாம். தூய்மை இந்தியா திட்ட நிதியில் கட்டுப்பட்டுள்ள பொதுக் கழிப்பிடம் தூய்மையாக பராமரிக்கப்படவில்லை. நடைபயிற்சி செல்லும் பாதைகளில் தூய்மை பணி சரிவர நடப்பதில்லை. நாய் தொல்லையும் அதிகம்.

பூங்காவுக்குள் செல்ல இரு வழிகள் உள்ளன. அதில் ஒரு நுழைவுவாயில் பகுதியில் மட்டும் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. மறுபகுதியில் இல்லை. பூங்காவுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் நடைபயிற்சிக்கு வந்து செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. 2 நுழைவுவாயில்களின் முன்பும் நடைபயிற்சி வருவோரின் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதிகள் இல்லை. இருக்கும் இடத்தையும் ஆட்டோக்களும், சாலையோர கடைகளும், குப்பை தொட்டிகளும் ஆக்கிரமித்துள்ளன.

வடஅகரம் சாலை வழியாக பூங்காவுக்குள் செல்லும் நுழைவுவாயில் முன்பு உள்ள நடைமேடைகள் பெயர்ந்து கிடக்கின்றன. நடந்து செல்ல முடியாத அளவுக்கு சிதைந்து போயிருப்பதால் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். பூங்காவின் இருக்கைகளில் பலரும் படுத்து உறங்குகிறார்கள். போதையில் உறங்குகிறார்களோ என்ற அச்சத்திலேயே பெண்கள் நடைபயிற்சி செல்ல வேண்டியுள்ளது. மொத்தத்தில், இந்த பூங்காவில் பாதுகாப்பு குறைபாடுகளையும் முறையான பராமரிப்பையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து 109-வது வார்டு உறுப்பினர் சுகன்யா செல்வத்திடம் கேட்டபோது, “பூங்காபராமரிப்புக்கு விடப்பட்ட ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டது. தொடர்ந்து பராமரிப்பு பணி மேற்கொள்ள விரைவில் டெண்டர் விடப்படும்.அதுவரை மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளோம். நடை மேடையை பழுதுபார்க்க சுமார்ரூ.5 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாராக உள்ளது.மக்களின் இதர கோரிக்கைகளையும் நிறைவேற்றுவோம்" என்று தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது திறக்கப்பட்டு வெள்ளிவிழா கண்ட இந்த பூங்காவை முறையாக பராமரிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x