Published : 27 Oct 2024 01:05 PM
Last Updated : 27 Oct 2024 01:05 PM

மனித உரிமை ஆணையத் தலைவரின் பாதுகாப்பு இருமுறை வாபஸ்: அன்புமணி கண்டனம்

சென்னை: மனித உரிமை ஆணையத் தலைவரின் பாதுகாப்பு இருமுறை வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. அத்துமீறலை விசாரிப்பதற்காக அரசு பழிவாங்குகிறதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவரும், கேரள உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியுமான மணிக்குமாரின் வீட்டுக்கு அளிக்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு கடந்த 3 நாட்களில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இருமுறை திரும்பப்பெறப்பட்டிருக்கிறது. காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசுக்கும், மனித உரிமை ஆணையத்துக்கும் நடைபெற்று வரும் திரைமறைவு மோதலின் ஒரு கட்டமாக மனித உரிமை ஆணையத் தலைவருக்கு நெருக்கடி அளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

சென்னையில் அண்மையில் நடத்தப்பட்ட 3 என்கவுண்டர்கள் குறித்தும், காஞ்சிபுரத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை பெண் ஆய்வாளர் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள் குறித்தும் விசாரணை நடத்திய தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரேசன், காவல்துறையினருக்கு எதிராக இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தார்.

அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு மாநில மனித உரிமை ஆணையம் தயாராகி வந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி அவர் திடீரென மயிலாடுதுறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதுடன், உடனடியாக புதிய பணியில் சேரும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். அவருக்கு பதிலாக மனித உரிமை ஆணைய புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக கிருஷ்ணமூர்த்தி என்பவர் நியமிக்கப்பட்டார்.

மனித உரிமை ஆணையத்திலிருந்து சுந்தரேசன் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த தமிழக அரசு, உடனடியாக ஆணையத்தின் புதிய செயலாளராக அதிகாரி ஆர்.கண்ணன் என்பவரை அமர்த்தி, அவர் வாயிலாக சுந்தரேசனை விடுவித்து, அவருக்கு மாற்றாக கிருஷ்ணமூர்த்தியை அந்த இடத்தில் அமர்த்த திட்டமிட்டது.

அதையறிந்த நீதியரசர் மணிக்குமார், தமது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, இதில் தலையிட்டு மனித உரிமை ஆணையத்தின் துணைக் கண்காணிப்பாளராக சுந்தரேசன் நீடிப்பார் என்று ஆணையிட்டார். அரசின் ஆணைக்கு மனித உரிமை ஆணையத் தலைவர் தடை விதித்ததை தாங்கிக் கொள்ள முடியாத தமிழக அரசு, கடந்த 23 ஆம் நாள் மனித உரிமைகள் ஆணையத் தலைவர் மணிக்குமாரின் வீட்டிற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப்பெற்றது.

இதுகுறித்து தமிழக அரசின் உயரதிகாரிகள் சிலரிடம் நீதியரசர் மணிக்குமார் தகவல் தெரிவித்ததாக கூறப்படுவதன் அடிப்படையில், அன்று மாலை முதல் அவரது வீட்டுக்கு மீண்டும் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தமிழக அரசுக்கும், மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கும் இடையில் மோதல் முற்றியது.

மனித உரிமைகள் ஆணையத்தின் காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி என்பவரை முதலில் திருப்பி அனுப்பிய ஆணையத் தலைவர் நீதியரசர் மணிக்குமார், கடந்த 24 ஆம் தேதி ஆணையத்தின் செயலாளரான இ.ஆ.ப. அதிகாரி கண்ணனையும் திருப்பி அனுப்பினார். இது குறித்து தமிழக அரசின் பொதுத்துறை செயலாளருக்கும் அவர் முறைப்படி கடிதம் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி, தமது ஒப்புதல் இல்லாமல் எந்தக் கோப்பும் யாருக்கும் அனுப்பப்படக்கூடாது என்றும் ஆணைய அதிகாரிகளுக்கு மணிக்குமார் ஆணையிட்டார்.

இந்த ஆணையைத் தொடர்ந்து நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நீதியரசன் மணிக்குமாரின் வீட்டுக்கு மூடுந்தில் சென்ற காவல்துறையினர், அங்கு பணியில் இருந்த 4 காவலர்களையும் அழைத்து நீதியரசருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டு விட்டதாகக் கூறி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து வாகனத்தில் ஏறும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதையறிந்த நீதியரசர் மணிக்குமார் காவல்துறையினரை அழைத்து, முறையான ஆணை இல்லாமல் தமது வீட்டின் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள காவலர்களை அனுப்ப முடியாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, காவல்துறை மற்றும் சட்டத்துறையின் உயரதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அதைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை வரை அவருக்கு பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஆணையிட்டாஎ என்பதற்காக மாநில மனித உரிமை ஆணையத் தலைவரின் பாதுகாப்பை 3 நாட்களில் இருமுறை திரும்பப் பெற்றதும், இப்போதும் நாளை வரை மட்டுமே அவருக்கு பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டிருப்பதும் ஏற்க முடியாதவையாகும். தமிழ்நாட்டில் மனித உரிமைகள், அதிலும் குறிப்பாக அரசாலும், காவல்துறையாலும் மனித உரிமைகள் எந்த அளவுக்கு மீறப்பட்டாலும் அதை மனித உரிமை ஆணையம் வேடிக்கைப் பார்க்க வேண்டும்; மாறாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று நினைத்தாலோ, முயன்றாலோ இது தான் கதி என்பதை சொல்லாமல் சொல்வதற்காகவே இந்த நடவடிக்கையை அரசு எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் மனித உரிமைகளை பாதுகாப்பது தான் மனித உரிமை ஆணையத்தின் பணி. அந்தப் பணியைத் தான் அதன் தலைவரும், காவல் துணைக் கண்காணிப்பாளரும் செய்துள்ளனர். அதற்காக அதிகாரியை இடமாற்றம் செய்வதும், ஆணையத் தலைவருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப் பெறுவதும் சரியல்ல. இதை மனித உரிமை ஆணையத்தின் தலைவரை அச்சுறுத்தி, நெருக்கடி கொடுத்து, பணிய வைக்கும் முயற்சியாகவே பார்க்க முடிகிறது.

இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இணையான தகுதி கொண்டவர். அவருக்கே இந்த நிலை என்றால், கீழ்நிலை அதிகாரிகள், அரசின் அத்துமீறலை எதிர்த்து குரல் கொடுத்தால் அவர்களின் நிலை என்னவாகும்? என்பதை நினைக்கவே கவலையாக இருக்கிறது.

அதிகாரத்திற்கு வரும் வரை மனித உரிமைகள் குறித்து பக்கம் பக்கமாக பேசும் ஆட்சியாளர்கள், ஆட்சிக்கு வந்தவுடன் மனித உரிமை ஆணையம் பொம்மை அமைப்பாகவே செயல்பட வேண்டும்; அதன் தலைவராக வரும் நீதிபதிகள் தங்களின் விரலசைவுக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். அதற்கு உடன்படாதவர்கள் இப்படியெல்லாம் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இது ஜனநாயகம் அல்ல.

எனவே, மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசர் மணிக்குமாருக்கு எந்த இடையூறுமின்றி தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். மாநில மனித உரிமை ஆணையம் சுதந்திரமாக செயல்படுவதற்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x