Published : 27 Oct 2024 12:49 PM
Last Updated : 27 Oct 2024 12:49 PM
விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் இன்று (ஞாயிறு) மாலை நடைபெறுகிறது. மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் 100 அடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பேச உள்ளார்.
இந்த மாநாட்டுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் நேற்று இரவு முதலே மாநாட்டு திடலுக்கு வரத்தொடங்கினர். காலை 6 மணிக்கு மேல் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
காலை 7 மணி முதலேய மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த 3 பிரதான நுழைவு வாயிலகள் வழியாக அனுமதிக்கப்பட்டனர். இதில் குறிப்பாக 30 வயதுக்கு கீழுள்ள இளைஞர்கள் பட்டாளம் அதிகளவில் இருந்தனர். மேலும் ஏராளமான இளம்பெண்களும் வருகை தந்தனர்.
இப்போதே நிரம்பிய இருக்கைகள்: பெரும்பாலும் அரசியல் கட்சி மாநாடுகளில் நெடுந்தொலைவில் இருந்து வாகனங்களில் ஆண்கள் அதிகளவில் வருவது வழக்கம். ஆனால் விஜய்யின் தவெக மாநாட்டில் இளம் பெண்கள் பலர் வந்திருந்தனர். இதனால் பகல் 12 மணிக்கு மாநாட்டு திடலில் போடப்பட்டிருந்த 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள் நிரம்பியது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக திருச்சி மார்க்கத்தில் இருந்தும், சென்னை மார்க்கத்தில் இருந்தும் வட தென் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கார், வேன், பேருந்துகளில் அதிகாலை முதலே தவெக தொண்டர்கள் திரண்டு வந்தனர்.
இதனால் விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் இருந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலையில் இருந்தே வாகனங்கள் தொடர்ச்சியாக அணிவகுத்துச் சென்றன. விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் காலை 10 மணி முதல் அதிகளவில் தவெக தொண்டர்களின் வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விக்கிரவாண்டி டோல்கேட் முதல் வி.சாலை அடுத்த சித்தனி வரை சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக தவெக மாநாட்டு வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
பகல் 12 மணி வரை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வாகனங்கள் மாற்று சாலையில் திருப்பி விடப்படாததால் சென்னை மற்றும் திருச்சி மார்க்கமாக சென்ற வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் பொதுமக்கள், பயணிகள் அவதியடைந்தனர்.
மாநாட்டு திடல் பகுதியில் திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், மாநாட்டுக்கு வந்தவர்களை பாதுகாப்பாக அனுப்பவும் சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
மாநாட்டு திடலினுள் தொண்டர்களின் வசதிக்காக 350 மொபைல் டாய்லெட், 22 ஆம்புலன்ஸ், 18 மருத்துவக் குழுவினர், 5 இடங்களில் பார்க்கிங் அமைக்கப்பட்டு வாகனங்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டு திடலில் கியூஆர் கோர்டு மூலம் ஸ்கேன் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள 13 கிராமங்களில் விஜய் ரசிகர்கள் கிராமத்துக்கு ஒரு பேருந்து வீதம் 13 பேருந்துகளில் மாநாட்டுக்கு வருகை தந்துள்ளனர். தேனி மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து கட்சி தொண்டர்கள் பிரியாணி செய்து அன்னாதானம் வழங்க பாத்திரம், கேஸ் அடுப்பு, சிலிண்டருடன் வந்து சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரியில் இருந்து புறப்பட்ட தொண்டர்கள் 3 வேலையும் உணவு தயாரித்து சாப்பிட்டு மாநாட்டுக்கு வருகை புரிந்துள்ளனர். கட்சி வர்ணம் முகத்தில் பூசிக்கொண்டு கோஷமிட்டனர். மாநாட்டு திடலைச் சுற்றியும் தண்ணீர் பாட்டில், ஐஸ் கிரீம், சிப்ஸ், சிகரெட், பாக்கு உள்ளிட்டவைகள் சிறு கடைகள் விரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பகல் 12.30 மணி வரை சுமார் 1 லட்சம் பேர் வரை மாநாட்டு திடலில் குவிந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >> விக்கிரவாண்டி அருகே இன்று தவெக மாநாடு: கட்சி தலைவர் விஜய் கொடியேற்றி உரையாற்றுகிறார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT