Published : 27 Oct 2024 06:35 AM
Last Updated : 27 Oct 2024 06:35 AM

அக்.30-ல் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜை: பழனிசாமி, பன்னீர்செல்வம் மரியாதை

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்.30-ம் தேதி நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் மரியாதை செலுத்த உள்ளனர்.

இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்’ என்று பிரகடனப்படுத்தி, தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த, பல்வேறு சிறப்புகளுக்குரிய உன்னதத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். இவரது 117-வது பிறந்தநாள் மற்றும் 62-வது குருபூஜை விழா வரும் 30-ம் தேதி காலை 10.30 மணிக்கு, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறுகிறது.

இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று, மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்த உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது கொள்கைகளாகக் கொண்டு வாழ்ந்த முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த நாள் மற்றும் 62-வது குருபூஜையை முன்னிட்டு 30-ம் தேதி காலை 10-00 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறும் விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று, முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, தர்மர் எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக தேவர் குருபூஜை விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மேலும் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தை பார்வையிட்டும் ஏடிஜிபி ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x