Published : 27 Oct 2024 04:46 AM
Last Updated : 27 Oct 2024 04:46 AM
சென்னை: தீபாவளி பண்டிகையின்போது, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாவிட்டால், சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ரத்து செய்து, இலவச பயணத்தை அனுமதிக்கலாம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக மூன்று நாட்களுக்கு சேர்த்து 11,176 சிறப்பு பேருந்துகள், ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகள், சிறப்பு ஆம்னி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சொந்த வாகனங்கள், வாடகை வாகனங்கள் மூலமாகவும் செல்வோரை சேர்த்து, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து வெளியூர் செல்வார்கள் என தெரிகிறது.
அவ்வாறு செல்பவர்கள் சுங்கச்சாவடிகளில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் பண்டிகை காலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இங்கு ஃபாஸ்டேக் வசதி இருந்தாலும், ஸ்கேன் செய்வதற்கு சில சமயம் தாமதம் ஆவதால் பயணிகள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.
எனவே, பண்டிகையின்போது சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
தமிழக அரசு பேச்சுவார்த்தை: இதன் தொடர்ச்சியாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் தமிழக அரசுபேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை மண்டல தலைமையகத்தில் இருந்து சுங்கச்சாவடி மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: எந்த பகுதியில் இருந்து வாகனங்கள் அதிக அளவில் செல்கிறதோ, அந்த பகுதியில் கவுன்ட்டர்கள் எண்ணிக்கையை அதிகரித்து, மற்ற பகுதிகளில் கட்டண வசூல் கவுன்ட்டர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
‘ஸ்கேன்' செய்யும் கருவிகளை கூடுதலாக பயன்படுத்த வேண்டும். அதற்கேற்ப ஊழியர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுதபூஜைக்கு பிறகு சென்னை திரும்பிய வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டபோது, சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லாமல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
அதேபோல, வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாத சூழலில், சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லா பயணத்தை அனுமதிக்கலாம் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT