Published : 27 Oct 2024 06:39 AM
Last Updated : 27 Oct 2024 06:39 AM

விக்கிரவாண்டி அருகே இன்று தவெக மாநாடு: கட்சி தலைவர் விஜய் கொடியேற்றி உரையாற்றுகிறார்

விழுப்புரம் / சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றிக் கொள்கைத் திருவிழா’ என்ற பெயரில் இன்று (அக். 27) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி, 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சித்தலைவர் விஜய் கொடியேற்றி உரையாற்றுகிறார்.

மாநாட்டுக்காக 60 அடி அகலம்,170 அடி நீளத்துக்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையில்இருந்து 800 மீட்டர் தொலைவுக்கு விஜய் நடந்துசென்று, தொண்டர்களைச் சந்திக்கும் வகையில் உயர்நிலைப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

மேடைக்கு இடதுபுறம் பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், தியாகி அஞ்சலையம்மாள் ஆகியோரது கட்அவுட்களுடன், வலதுபுறம் தமிழன்னை, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் விஜய் கட்அவுட் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டு முகப்பு கோட்டைமதில் சுவர்போல வடிவமைக்கப்பட்டு, அதன் மீது தமிழ்நாடு சட்டப்பேரவை வடிவில் மற்றொரு முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்களுக்காக 55 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மேலும், 40 எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன.

தொண்டர்களுக்கு வழங்குவதற்காக 5 லட்சம் தண்ணீர் பாட்டில்கள், ஒரு லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும், 300 மொபைல்கழிப்பறைகள் மற்றும் 700 குடிநீர்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்களை நிறுத்துவதற்காக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று நண்பகல் 12 மணிமுதல் 2 மணிக்குள் தொண்டர்கள்மாநாட்டுத் திடலை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டு நிகழ்வுகளைஉடனுக்குடன் சமூகவலைதளங்களில் பகிரும் வகையில் தடையில்லா இணையதள வசதிக்கான தற்காலிக மொபைல் டவர் அமைக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர் விஜய் 100 உயரமுள்ள கொடிக் கம்பத்தில் ரிமோட் மூலம் கட்சிக் கொடியேற்றி, கட்சியின் கொள்கைகளை வெளியிட்டு பேச உள்ளார். மாநாட்டைஇரவு 9 மணிக்கு முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 4,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர, மேடையைச் சுற்றிலும் ஏராளமான ‘பவுன்சர்கள்’ குவிக்கப்பட்டுள்ளனர். கட்சியினர் கூறும்போது, “மாநாட்டுக்கு தனி அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. யார் யார் பங்கேற்பார்கள் என்பதும் தெரியவில்லை. எல்லாம் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.

தொண்டர்களுக்கு அறிவுரை: தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: எல்லா வகைகளிலும் நீங்களும், உங்கள் பாதுகாப்புமே எனக்கு முக்கியம். எனவே, மாநாட்டு பயணப் பாதுகாப்பில் அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும். இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன்.

அதேபோல, வரும் வழியில் மக்களுக்கோ, போக்குவரத்துக்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதுடன், மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காவல் துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்களின் பாதுகாப்பான பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு நான் வருவேன். நீங்களும்அதை மனதில் வைத்தே வாருங்கள். மாநாட்டில் சந்திப்போம், மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x