Published : 26 Oct 2024 07:40 PM
Last Updated : 26 Oct 2024 07:40 PM
மதுரை: பெருமழைக்கு கடந்த ஒரு வாரமாக மதுரை மாநரின் குடியிருப்புகளையும், சாலைகளையும் மழைத் தண்ணீர் சூழ்ந்த நிலையில், மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட வரவில்லை. ஆனால், அங்கு கழிவுநீர் மட்டுமே தேங்கி நிற்கும் அவலம் 70 ஆண்டுகளாக தொடர்கிறது.
கடந்த சில நாட்களாக மதுரை நகர் பகுதியில் பெய்த மழையால் செல்லூர் கண்மாய், வண்டியூர் கண்மாய், ஆணையூர் கண்மாய், ஊமச்சிக்குளம் கண்மாய், நாராயணபுரம் கண்மாய் போன்ற நகரின் முக்கிய நீர்நிலைகள் நிரம்பின. இந்தக் கண்மாய்களை முறையாக தூர்வாராததால் நிரம்பியதுபோன்ற தோற்றத்துடன் மறுகால் பாய்ந்து நகருக்குள் தண்ணீர் புகுந்தன. இதனால் பல பகுதிகளின் குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழைநீர் இன்னும் வடியாததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியவில்லை. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து தடைபட்டு தெப்பம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
ஆனால், ஒரு காலத்தில் தண்ணீர் நிரம்பி ரம்யமாக காணப்பட்ட கூடலழகர் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக டவுன் ஹால் ரோடு கூடலழகர் பெருமாள் தெப்பக்குளத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் வரவில்லை. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான கூடலழகர் பெருமாள் கோயில் சங்க காலத்துக்கு முன்பே தோன்றிய பழம்பெருமை கொண்டது. இந்த தெப்பக்குளம் ஒன்றேகால் ஏக்கரில் காணப்படுகிறது. இக்கோயிலின் தெப்ப உற்சவம் புகழ்பெற்றது.
1960-ம் ஆண்டு வரை, மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் போல் இந்தக் கோயிலிலும் ஆண்டுதோறும் தெப்ப உற்சவம், தண்ணீர் நிரம்பிய இந்த தெப்பக்குளத்தில் கோலாகலமாக நடந்துள்ளது. அதன் பிறகு இந்தக் கோயிலில் தெப்ப உற்சவத்தை தண்ணீரில் நடத்தாமல் நிலத்தில் நடத்தி வருகிறார்கள். நகரின் முக்கிய கண்மாய்களும், குளங்களும் நிரம்பி, உடைப்பு ஏற்படும் அளவுக்கு, மதுரையை மழை சூழ்ந்திருக்கும் நிலையில் கூடலழகர் பெருமாள் தெப்பக்குளத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் வராதது ஆட்சியாளர்களின் கவனக் குறைவாகவே பார்க்கப்படுகிறது.
மதுரையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பகல் பொழுதில் 15 நிமிடத்தில் 4.5 செ.மீ., மழை பெய்தது. அன்று மட்டுமே 9.8 செ.மீ., மழை பதிவானது. ஆனால், கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பத்துக்கு ஏன் தண்ணீர் வரவில்லை? என்று, மாநகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகளோ மக்கள் பிரதிநிதிகளோ சிறிதும் சிந்தித்துப் பார்க்கவில்லை. ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும், இந்த தெப்பக்குளத்துக்கு அருகே பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் தெப்பம்போல் தண்ணீர் தேங்கி, அப்பகுதியில் ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பிக்கும்.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் பேருந்து நிலையத்தை புனரமைத்துக் கட்டும்போது, மழைநீர் தேங்காதவாறு, கூடலழகர் பெருமாள் தெப்பக் குளத்துக்கு தண்ணீர் செல்லக்கூடிய வகையில் கால்வாய் அமைக்கப்படும் என மாநகராட்சி கூறியது. ஆனால், அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. கடந்த காலத்தில் மதுரை கோச்சடையில் இருந்து பெருமாள் தெப்பக் குளத்துக்குக் கால்வாய் வழியாக ஆண்டு முழுவதும் தண்ணீர் வந்துள்ளது.
ஆனால், தற்போது அங்கிருந்தும் தண்ணீர் வரவில்லை. தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் நாளுக்கு நாள் தெப்பக்குளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்து தெப்பக்குளமும் பராமரிப்பு இல்லாமல் முட்புதர் மண்டி, தற்போது கழிவு நீர் மட்டுமே தேங்கி நிற்கிறது. இந்த தெப்பக்குளத்தை போல், வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளமும் தண்ணீர் வராமல் நிரந்தர வறட்சிக்கு இலக்கானது.
கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளராக இருந்த விசாகன், வைகை ஆற்றில் இருந்து வண்டியூர் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் செல்வதற்கு கால்வாய் வெட்டி, பழைய கால்வாயையும் தூர்வாரினார். அதனால், தற்போது நிரந்தரமாக வைகை ஆற்றில் இருந்து வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதுபோல், கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தின் நீர் வழித்தடக் கால்வாய்களை ஆய்வு செய்து, அதன் மூலம் இக்குளத்துக்கு தண்ணீர் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
70 ஆண்டாக தண்ணீர் வரவில்லை: இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முத்து கூறுகையில், “கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் நிரம்பி 70 ஆண்டாகிவிட்டது. எனக்கு 62 வயதாகிறது. எனக்கு விவரம் தெரிந்து இக்குளத்துக்கு தண்ணீர் வரவில்லை. மாடக்குளம் கண்மாயில் இருந்தும், வைகை ஆற்றிலும் இருந்தும் கண்மாய்க்கு தண்ணீர் வருவதற்கான நீர் வழித்தடங்கள் இருந்துள்ளன. அந்த நீர் வழித்தடங்களை மறித்து கட்டிடங்கள் கட்டப்பட்டன. அதன்பிறகு 2003-ல் ஜெயலலிதா ஆட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் மழைநீர் சேமிப்பு திட்டத்தில் இப்பகுதியில் பெய்த மழைநீரை சேகரித்து கால்வாய் வழியாக இக்குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த மழைநீர் சேமிப்பு வழித்தடங்களும் மறைந்துவிட்டன,” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT