Published : 26 Oct 2024 04:04 PM
Last Updated : 26 Oct 2024 04:04 PM
சென்னை: வெள்ளியங்கிரி மலைக்குச் செல்பவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செயலாளர் அ.அஸ்வத்தாமன் இன்று (அக்.26) வெளியிட்டுள்ள அறிக்கையில், “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் தென் கைலாயமான வெள்ளியங்கிரி மலைக்குச் செல்பவர்கள் ரூ.5,099 தமிழக அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ‘மலையேற்றத் திட்டம்’ என்ற பெயரில் இந்த அநியாயத்தை திராவிட மாடல் அரசு செய்துள்ளது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று சிவபெருமானை வணங்கி வருகின்றனர். வெள்ளியங்கிரி மலைக்கு வருகிறவர்கள் ஆன்மிக பக்தர்களே தவிர மலையேற்றத்துக்கு வருகிற சுற்றுலா பயணிகள் அல்ல. வெள்ளியங்கிரிக்கு நாள்தோறும் லட்சக்கணக்கில் வரும் பக்தர்களை தடுப்பதற்கு உதயநிதி திட்டம் தீட்டுகிறாரா என்ற கேள்வி எழுகிறது. சனாதன இந்து தர்மத்தை அழிப்பேன் என்று உதயநிதி தொடர்ந்து கூறி வருவது அனைவரும் அறிந்ததே. இது உதயநிதி முன்னெடுத்துள்ள சனாதன இந்து தர்ம ஒழிப்பு சதி திட்டத்தின் ஒரு அங்கமா என்பதை உதயநிதி தெளிவுபடுத்த வேண்டும்.
கடந்த வாரம் கூட திருவண்ணாமலையில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு என்கிற பெயரில் மலையைச் சுற்றி வந்தார்.வேண்டுதலுக்காக கிரிவலம் வந்திருப்பார் என்று மக்கள் பலரும் நினைத்த நிலையில், இப்பொழுது, திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கும்கூட கட்டணம் வசூலிக்கலாம் என்ற மோசமான யோசனையில் உதயநிதி அங்கு வந்து இருப்பாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. ஒரு மிகப்பெரிய ஆன்மிக ஆதார ஸ்தலமான வெள்ளியங்கிரி மலையின் வழிபாட்டை வெளிப்படையாகவே குலைக்கும் நோக்கத்தோடு இந்த அறிவிப்பை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT