Published : 26 Oct 2024 01:42 PM
Last Updated : 26 Oct 2024 01:42 PM
சென்னை: “இரண்டாவது கட்டத்துக்கான பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இப்பணிகளை முடிக்க இலக்கிடப்பட்டுள்ள கால வரையறைக்குள் பணிகளை முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எனது அரசும், அலுவலர்களும் மேற்கொண்டு வருகின்றனர்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை, நந்தனத்திலுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (அக்.26) நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் 2007-ம் ஆண்டு தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை துவக்கினோம்.
22 ஆயிரத்து 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 54.1 கிலோ மீட்டர் நீளத்துக்கு 2 வழித்தடங்களில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தினால் சென்னை மக்கள் பெரும் பயனடைந்து வருகின்றனர். நாள்தோறும் 3 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேல் பயணிகளுக்கு பலனளித்து இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கிலோ மீட்டர் நீளத்துக்கு 3 வழித்தடங்களில் இந்த மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறோம்.
இதுவரை 19 ஆயிரத்து 229 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் செயல்படுத்தப்பட்ட அதே முறையில் இரண்டாவது கட்டப் பணிகளும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்திய கோரிக்கையை ஏற்று, அதற்கான ஒப்புதலை அண்மையில் அளித்த பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் முதற்கண் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இரண்டாவது கட்டத்துக்கான பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இப்பணிகளை முடிக்க இலக்கிடப்பட்டுள்ள கால வரையறைக்குள் இந்தப் பணிகளை முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எனது அரசும், அலுவலர்களும் மேற்கொண்டு வருகின்றனர்,” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT