Published : 26 Oct 2024 01:49 PM
Last Updated : 26 Oct 2024 01:49 PM
விழுப்புரம்: திண்டிவனம் அருகே குட்கா கடத்தி வந்த தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இருவரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.
திண்டிவனத்தை அடுத்த வெள்ளிமேடுபேட்டை பேருந்து நிலையம் அருகே உதவி ஆய்வாளர் சீதாபதி தலைமையிலான போலீஸார் நேற்று இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால், போலீஸாரை கண்டவுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தப்பி ஓடினர்.
அவர்களை துரத்தி மடக்கிப் பிடித்த போலீஸார், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 607 பாக்கெட் குட்கா, பான் மசாலா, கூலிப், ஹான்ஸ் ஆகியவை இருந்தது தெரிய வந்தது. உடனே அவர்களை இருவரையும் போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் திண்டிவனம் ரோசனைப்பாட்டை பகுதியைச் சேர்ந்த ரியாசுதீன் (25), கோபிநாத் (25) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் மேலும் விசாரித்ததில், ரியாசுதீன் விஜய் மக்கள் இயக்கத்தில் நகர இளைஞரணி தலைவராக இருந்ததும், தற்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் செயல்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.
இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் வைத்திருந்த குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்ளையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைதான ரியாசுதீன் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வருபவர்களை வரவேற்று திண்டிவனத்தில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT