Published : 26 Oct 2024 12:49 PM
Last Updated : 26 Oct 2024 12:49 PM

‘‘மதுரை மாநகரம் வெள்ளத்தில் மிதப்பதற்கு தமிழக அரசே காரணம்’’: ராமதாஸ் கண்டனம்

மதுரையில் தேங்கியிருக்கும் மழை

சென்னை: மதுரையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அரசும், மாநகராட்சியும் உடனடியாக வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: மதுரை மாநகரில் நேற்று பகலில் 10 நிமிடங்களில் 4.5 செ.மீ அளவுக்கும், மொத்தமாக 11 மணி நேரத்தில் 10 செ.மீ அளவுக்கு மழை பெய்த நிலையில், மாநகரத்தின் பெரும்பான்மையான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. பல பகுதிகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் தீவாக மாறியிருப்பதால் அங்குள்ள மக்கள் பால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கூட கிடைக்காமலும், குளங்களாக மாறி விட்ட வீடுகளை விட்டு வெளியேற முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு அரசின் சார்பிலும், மாநகராட்சி சார்பிலும் இதுவரை உணவு உள்ளிட்ட அடிப்படை உதவிகள் கூட வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

10 நிமிடங்களில் 4.5 செ.மீ அளவு மழை என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்று தான் என்றாலும் கூட, காலநிலை மாற்றத்தின் விளைவாக இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நடக்கும் என்பதை கணித்து, எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள வசதியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசும், மாநகராட்சியும் மேற்கொண்டிருக்க வேண்டும்.

வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மழை நீரை வைகை ஆற்றுக்கு கொண்டு செல்வதற்கான பந்தல்குடி கால்வாய் உள்ளிட்ட பல கால்வாய்களை அரசும், மாநகராட்சியும் தூர்வாரியிருக்க வேண்டும். தூர்வாரியதாக கணக்கு காட்டப்பட்டாலும் கூட களத்தில் எந்தப் பணியும் நடக்கவில்லை. இதில் தமிழக அரசும், மாநகராட்சியும் படுதோல்வி அடைந்துவிட்டன.

அதனால் தான் மழை நீரை வைகைக்கு கொண்டு செல்ல வேண்டிய பந்தல்குடி கால்வாய் குடியிருப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்று விட்டது. ஏற்கனவே பெய்த மழையுடன், கால்வாய்கள் நிரம்பியதால் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் சேர்ந்து கொண்டதால் தான் மழை - வெள்ள பாதிப்பு மிக அதிகமாகியிருக்கிறது. இவை அனைத்திற்கும் தமிழக அரசும், மதுரை மாநகராட்சியும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்; சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் கூட, போதிய நிதி இல்லை என்று கூறி எந்தப் பணியையும் மாநகராட்சி செய்யவில்லை. பருவமழையிலிருந்து மக்களை பாதுகாத்திருக்க வேண்டிய மதுரை மாநகராட்சி, அனைத்து பாதிப்புகளையும் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசின் செயல்பாடின்மைக்கு இதைவிட மோசமான எடுத்துக்காட்டு இருக்க முடியாது.

மதுரையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அரசும், மாநகராட்சியும் உடனடியாக வழங்க வேண்டும். மழை நீரை வடியச் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன், எதிர்காலத்தில் இத்தகைய பாதிப்புகளைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் வசதியாக மதுரை மாநகராட்சிக்கு போதிய நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x