Published : 26 Oct 2024 05:45 AM
Last Updated : 26 Oct 2024 05:45 AM
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் மூலகொத்தளம் திட்டப்பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு அனைத்து மேம்பாட்டு வசதிகளுடன் கூடிய 1035 குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு, 2021 -ம் ஆண்டு பணிகள் நிறைவடைந்தது. தகுதியுள்ள பயனாளிகள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு , விடுபட்ட சில சிறு பணிகளும் முடிக்கப்பட்டு 2023 -ம் ஆண்டு குடியமர்த்தும் பணி தொடங்கப்பட்டது.
இத்திட்டப்பகுதி 11 தளங்களுடன் 9 கட்டிட தொகுப்புகளாக 1035 குடியிருப்புகள் மின்தூக்கி , மேல்நிலை நீர்தேக்க தொட்டி , தீயணைப்பான், மின் ஆக்கி , இடிதாங்கி, பாதாள சாக்கடை, மின்சாரம், மழைநீர் வடிகால், கான்கீரிட் சாலை மற்றும் மழைநீர் சேமிப்பு போன்ற அடிப்படை வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. மேலும் இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் நவீன கட்டுமான தொழில்நுட்பமான ‘மிவன்’ மூலம் கட்டப்பட்டதாகும்.
கடந்த 2 ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்படாத குடியிருப்புகளில் அங்குள்ள சமூக விரோதிகளால் மின்வயர்கள், மின்தூக்கி உபகரணங்கள் மற்றும் பிவிசி குழாய்கள், யுபிவிசி ஜன்னல்கள், கதவுகள், ஸ்விட்ச்கள் போன்றவை சேதப்படுத்தப்பட்டு திருடப்பட்டன.
இது தொடர்பாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, காவல்துறையினரால் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு குடியிருப்புகளின் உட்கட்டமைப்பு வசதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தற்போது பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு செய்யும் பொழுது சேதப்படுத்தப்பட்ட குடியிருப்புகளில் உட்கட்டமைப்பு வசதிகள் சரிசெய்யப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் வாரியத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 554 குடும்பங்களுக்கு குடியிருப்புகளில் உள்ள பழுதுகள் சரிசெய்யப்பட்டு நல்ல நிலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. புதிதாக வரும் பயனாளிகளுக்கு பழுதுகள் சரிசெய்யப்பட்டு குடியிருப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT