Published : 25 Jun 2018 07:36 AM
Last Updated : 25 Jun 2018 07:36 AM
தெளிவான சிந்தனையும், திட்டமிட்ட செயல்பாடுகளும் வெற்றியைத் தேடித் தரும் என்று கவிஞர் கவிதாசன் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தி னார்.
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்காகமுதல் முறையாக இந்த ஆண்டுமுதல் ஆன்லைன் கலந்தாய்வு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதையொட்டி, ‘தி இந்து’ நாளிதழ் மற்றும் சாய்ராம் கல்விக் குழுமம் இணைந்து ‘உயர்வுக்கு உயர் கல்வி’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கை நடத்தி வருகின்றன.
ஏற்கெனவே மதுரை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய ஊர்களில் நடைபெற்ற நிலையில் நேற்று கோவை, விழுப்புரத்தில் நடைபெற்றது. கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை மட்டுமின்றி, சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர். விழா அரங்கம் முழுமையாக நிரம்பிய நிலையில், மேடை மற்றும் மேடையின் முன்புறமும் மாணவர்கள் தரையில் அமர்ந்தபடி விழாவில் கலந்துகொண்டனர்.
‘தி இந்து’ குழும பொதுமேலாளர் (விற்பனை பிரிவு) டி.ராஜ்குமார் வரவேற்றார்.
கருத்தரங்கை தொடங்கிவைத்து கோவை ரூட்ஸ் குழும இயக்குநர் கவிஞர் கவிதாசன் பேசியதாவது: மாணவர்களின் வாழ்வை செம்மைப்படுத்த 'தி இந்து' தமிழ் மேற்கொண்டுள்ள முயற்சிக்குப் பாராட்டுகள். தெளிவான சிந்தனை, திட்டமிட்ட செயல்பாடுகள், விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவை வெற்றியைத் தேடித் தரும். எந்த துறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் சிறந்தவராக உருவாகி, முத்திரை பதிக்க வேண்டும்.
பொறியியல் மாணவர்களுக்கு படைப்பாற்றல் மிகவும் அவசியம். கல்வியை, தொழிலுடன் இணைத்து செயல்படும்போது உயர்வு நிச்சயம். சமுதாயத்துக்கு உதவும் நோக்குடன் புதிய கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நல்ல எதிர்காலம்
கல்வி ஆலோசகர் கே.மாறன் பேசும்போது, ‘பொறியியல் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. வெளிநாடுகளில் உள்ள பல நிறுவனங்களில் நம் மாணவர்கள் உயர்ந்த பதவிகளை வகிக்கின்றனர். பொறியியல் கல்வியுடன், அதைச் சார்ந்த துணை படிப்புகளையும் படிப்பது பயனுள்ளதாக இருக்கும். மேலும், தகவல் தொடர்பு திறனும் முக்கியம். நல்ல கட்டமைப்பு வசதி, சிறந்த ஆசிரியர்கள், வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் திறன் மிகுந்த கல்லூரியைத் தேர்வு செய்து படிக்க வேண்டும்’ என்றார்.
வாழ்வில் மாற்றம்
கோவை பார்க் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி ஆர்.அனுஷா பேசும்போது, ‘பொறியியலும், அறிவியல் தொழில்நுட்பமும் நமது வாழ்வையே மாற்றுகின்றன. பொறியியல் கல்வியில் பல்வேறு புதிய பிரிவுகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. எதிர்காலத்தில், ரோபோடிக், விண்வெளித் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளுக்கு பெரிய அளவிலான வாய்ப்புகள் இருக்கும்’ என்றார்.
வெற்றி உறுதி
கோவை நேரு தகவல் தொழில்நுட்பம், மேலாண்மைப் பயிலக முதல்வர் ஆர். மோசஸ் டேனியல் பேசும்போது, ‘என்ன படிப்பது, எங்கு படிப்பது, எப்படி படிப்பது' என்ற கேள்விகளுக்கு விடை கண்டறிந்து, அதன்படி படித்தால் வெற்றி உறுதி. கல்வியுடன், செய்முறைப் பயிற்சி மிகவும் முக்கியம்’ என்றார்.
பெற்றோரின் தியாகம்
பட்டிமன்றப் பேச்சாளர் எஸ்.ராஜா பேசும்போது, ‘மாணவர்கள் திறனை வளர்த்துக் கொள்வதுடன், அதை வெளிப்படுத்தும் திறமையும் அவசியம். மாணவர்களின் வெற்றிக்குப் பின்னால் பெற்றோரின் தியாகம் உள்ளது. எனவே, வாழ்வில் எந்த நிலையை அடைந்தாலும், பெற்றோரையும், குருவையும் மறந்துவிடக்கூடாது. சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிக்கக் கூடாது. அதற்கு பதிலாக, நாளிதழ்களைப் படித்து, அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார்.
42 உதவி மையங்கள்
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் டாக்டர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் பேசும்போது, ‘ஏறத்தாழ 1.60 லட்சம் மாணவர்கள் பொறியியல் கல்விக்கு விண்ணப்பித்த நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு 1.10 லட்சம் மாணவர்கள் கவுன்சலிங்கில் பங்கேற்க உள்ளனர். வரும் 28-ம் தேதி காலை 8.30 மணிக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதற்குப் பிறகு கவுன்சலிங் நடைபெறும். இதற்காக மாநிலம் முழுவதும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார்.
‘தி இந்து’ தமிழ் கோவை விளம்பரப் பிரிவு மேலாளர் வி.செந்தில்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியை, கோவை பார்க் மற்றும் நேரு கல்விக் குழுமங்கள், எட்ஜ் , நியூஸ் 7 சேனல் ஆகியவை இணைந்து வழங்கின.
30-ம் தேதி சென்னை, திருச்சி
இதேபோன்ற கருத்தரங்கு வரும் 30-ம் தேதி சென்னை யில் அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கிலும், திருச்சியில் காவேரி மகளிர் கல்லூரி வளாகத்திலும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT