Published : 26 Oct 2024 02:27 AM
Last Updated : 26 Oct 2024 02:27 AM

பேரவை தேர்தல் பணி குறித்து ஆலோசிக்க அக்.28-ல் திமுக தொகுதி பார்வையாளர் கூட்டம்: ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது

சென்னை: சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதை எதிர்கொள்ளும் வகையில், ஆளுங்கட்சியான திமுக பல்வேறு முன்னேற்பாடுகளை கடந்த பல மாதங்களாகவே செய்து வருகிறது. மக்களவை தேர்தல் முடிந்ததுமே, சட்டப்பேரவை தேர்தலுக்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.

திமுகவில் அமைப்பு ரீதியாக மாற்றங்கள் செய்வது குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து இக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினர். பின்னர், பல்வேறு அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, தேர்தலின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தினர். இதுதவிர, திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்களை பிரித்து கூடுதல் மாவட்டங்களை உருவாக்குவது, அதற்கு நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம், திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் அக்டோபர் 28-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் இதில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x