Published : 25 Oct 2024 10:32 PM
Last Updated : 25 Oct 2024 10:32 PM

மதுரையில் கொட்டித் தீர்த்த மழையால் வெள்ளக்காடான சாலைகள்: போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் தவிப்பு

மதுரை நத்தம் சாலையில் மேம்பாலத்தின் கீழ் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்.  படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரையில் அடைமழை கொட்டியதால் சாலைகள் வெள்ளக் காடாகின. நகரின் பல இடங்களில் மழைநீர் வாய்க்கால்கள் உடைப்பெடுத்து குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து மக்கள் தவித்தனர்.

மதுரை நகரில் வெள்ளிக்கிழமை (அக்.25) பிற்பகல் 2 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியதால் ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. மாலை நேரம் என்பதால் பள்ளிக் குழந்தைகள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர். அலுவலகப் பணி முடிந்து அலுவலர்கள், தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

மதுரை - நத்தம் மேம்பாலத்தின் கீழ செல்லும் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்ததால் வாகனங்கள் தத்தளித்தன. ஆனையூர், ஊமச்சிக்குளம், ஆலங்குளம், கண்ணனேந்தல், மூன்றுமாவடி சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து வாகனங்கள் பல கி.மீ. வரிசையாக நின்றன. பல இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் செயல்படவில்லை. புதூர் பேருந்து நிலையம் அருகே காய்கறி சந்தை, நேத்ராவதி மருத்துவமனை முன் அழகர்கோவில் சாலையில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து போக்குவரத்து தடைப்பட்டது.

மழையில் நனைந்தபடியே குழந்தைகளை அழைத்து வரும் பெண். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

ஒரே நேரத்தில் கொட்டி தீர்த்த மழையால் அனைத்து துறை அதிகாரிகளும் செய்வதறியாமல் திகைத்தனர். குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து விட்டதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு கவுன்சிலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலதரப்பில் இருந்தும் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன. ஆணையர் தினேஷ்குமார் கொட்டும் மழையிலும் அதிக பாதிப்புள்ள வார்டுகளில் களமிறங்கி மழைநீரை வெளியேற்றி, தாழ்வான பகுதியில் வசித்த மக்களை மேடான இடங்களுக்கு அனுப்ப துரித நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் ரயில், சாலை பாலம், கீழ் பாலம் மற்றும் வைகை ஆற்று பாலங்களை கண்காணித்து, மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் சாலைகளில் போக்குவரத்தை தடை செய்ய காவல்துறையினரின் உதவியை நாடினார். மாநகராட்சி, பொதுப்பணித் துறை ஒருங்கிணைந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டதால் மாலை 6 மணிக்கு பிறகு வாகனப் போக்குவரத்து ஓரளவு சீரடைந்தது.

மழை பாதிப்பு துளிகள்:

  • 5-வது வார்டுக்கு உட்பட்ட முல்லை நகர் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் சிரமப்பட்டனர். 25 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
  • சர்வேயர் காலனி, மேலமடை, வண்டியூர், அண்ணாநகர், அண்ணா பேருந்து நிலையம், புதூர், ஆனையூர், பிபி.குளம், ஊமச்சிகுளம், திருப்பாலை, அய்யர்பங்களா, சிம்மக்கல், மாட்டுத்தாவணி, தல்லாகுளம், கோரிப்பாளையம், பனகல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
  • அரசு ராஜாஜி மருத்துவமனை, ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், தமுக்கம் பகுதி அலுவலகங்கள், கல்வி நிலைய வளாகங்களிலும் தெப்பம்போல தண்ணீர் தேங்கியது.
  • உயர் நீதிமன்ற மதுரை அமர்வு சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

சு.வெங்கடேசன் எம்பி., தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘மதுரையில் இன்று மாலை 3 மணி முதல் 3.15 வரையிலான 15 நிமிடத்தில் 4.5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடைப்பட்ட 9 மணி நேரத்தில் 9.8 செ.மீ. மழை பெய்துள்ளது. பாதிப்பின் தீவிரத்தை தணிக்க போர்க்கால நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்,’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x