Published : 25 Oct 2024 09:04 PM
Last Updated : 25 Oct 2024 09:04 PM
சென்னை: “பாஜக கிளைத் தலைவர்கள், உறுப்பினர்கள் தேர்வு நவம்பர் 11 முதல் 30-ம் தேதி வரை நடக்கிறது” என ஹெச்.ராஜா தெரிவித்தார்.
பாஜக அமைப்புத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னை அமைந்தகரையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெ.ராஜா, மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில், ஒன்றியம், நகர அளவில் அமைப்புத் தேர்தல் நடத்தும் தேர்தல் அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது: “பாஜகவில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
பாஜக ஒன்றிய, நகர நிர்வாகிகள், அதற்கு மேற்பட்ட பொறுப்பில் இருப்பவர்கள், தீவிர உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது பாஜகவின் விதிமுறைகளில் ஒன்று. ஒருவர் தீவிர உறுப்பினர் என்று சொன்னால், அவர் 50 உறுப்பினர்களை சேர்த்திருக்க வேண்டும். திராவிட கட்சிகளை பொறுத்தவரை 25 உறுப்பினர்களை சேர்த்தால் ஒரு கிளை என்று இருக்கிறது.
அந்த வகையில், திராவிட கட்சிகளுக்கு ஒரே பூத்தில் 2க்கு மேற்பட்ட கிளைகள் வரலாம். ஆனால், பாஜகவை பொறுத்தவரை பூத் என்பது அடிப்படையானது. அந்த பூத்தில் 50 உறுப்பினர்கள் இருந்தால் தான், அது அங்கீகரிக்கப்பட்ட கிளை ஆகும். அந்த வகையில், 50 உறுப்பினர்களை சேர்த்தவர்கள் தான், ஒன்றிய, நகர நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு வர முடியும். அந்த வகையில், தற்போது அமைப்பு தேர்தல் நடத்துவதற்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவ.11-ம் தேதி முதல் நவ.30-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிளைகளிலும் தலைவர் மற்றும் நிர்வாக குழு நியமிக்கப்படுவார்கள். அதாவது தலைவர் மற்றும் 11 கிளை கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அதில், 3 பேர் பெண்களாக இருக்க வேண்டும் என்பது கட்சியின் விதி. இதற்காக, மாவட்ட அளவில் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி இன்று வழங்கப்பட்டது. தேசிய அளவில் தற்போது வரை பாஜக பெற்ற வாக்குகளில், 45 சதவீதம் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அதேபோல், தமிழகத்திலும் 45 சதவீதம் பேர் உறுப்பினர்களாக இணைந்திருக்கிறார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT