Published : 25 Oct 2024 08:41 PM
Last Updated : 25 Oct 2024 08:41 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 112 அடியை கடந்ததால், அணையில் இருந்து நீர் மின் நிலையம் வழியாக இன்று (அக்.25) முதல் விநாடிக்கு 750 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நீப்பத்துறையில் இருந்து சாத்தனூர் அணை வரை தென்பெண்ணையாறு கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையால் கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் வேகமாக நிரம்பி வருகிறது. சாத்தனூர் அணையின் நீர்மட்டம் கடந்த 13-ம் தேதி 96 அடியாக இருந்தது.
அணைக்கு மிதமான அளவில் நீர்வரத்து இருந்ததால், அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வந்தது. தினசரி ஒரு அடி வரை உயர்ந்தது. இதனால், சாத்தனூர் அணையின் நீர்மட்டம் கடந்த 17-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு 100 அடியை எட்டியது. பின்னர், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், கிருஷ்ணகிரி அணையில் இருந்து, தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 10 அடி உயர்ந்து, 110 அடியை நேற்று அதிகாலை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 8,150 கனஅடி தண்ணீர் வருவதால், அணையின் நீர்மட்டம் இன்று (அக்.25) நண்பகல் 1 மணிக்கு 112 அடியை கடந்துவிட்டது. அணையில் 5,823 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இந்நிலையில், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து நீர் மின் நிலையம் பாதை வழியாக இன்று (அக்.25) மாலை 4.30 மணி முதல் விநாடிக்கு 750 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இது குறித்து சாத்தனூர் அணையின் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “அணையின் நீர்மட்டம் 114 அடிக்கு மிகாமல் பராமரிக்கப்பட உள்ளது. இதனால் பாசன விதிமுறைப்படி அணையில் இருந்து நீர்மின் நிலையம் வழியாக விநாடிக்கு 750 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை: அணைக்கு நீர்வரத்து, மேலும் அதிகரித்தால் படிப்படியாக 10 ஆயிரம் கனஅடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது. எனவே கொளமஞ்சனூர், திருவடத்தனூர், புதூர் செக்கடி, எடத்தனுர், ராயண்டபுரம், அகரம்பள்ளிப்பட்டு, உலகலாப்பாடி, எம்.புதூர், கீழ்ராவந்தவாடி, தொண்டமானூர், மலைமஞ்சனூர், அல்லப்பனூர், வாழவச்சனுர் மற்றும் சதாகுப்பம் கிராமங்களில் தென்பெண்ணையாறு கரையோரத்தில் வசிக்கும் மக்கள், ஆற்றை கடந்து செல்லாமலும், ஆற்றில் குளிக்காமலும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நீப்பத்துறையில் இருந்து சாத்தனூர் அணை வரை தென்பெண்ணையாறு கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் நவம்பர் 30-ம் தேதி வரை அதிகபட்சமாக 117 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
இதேபோல் ஜவ்வாது மலையிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் (காலை 8.30 மணி நிலவரப்படி 6 மி.மீ., மழை பெய்துள்ளது), மலையடிவாரத்தில் உள்ள 3 அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்கிறது. இதனால் 3 அணைகளில் இருந்து இன்றும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செங்கம் அருகே 59.04 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 54.12 அடியாக உள்ளது. அணையில் 576.50 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 142 கனஅடி வரும் நிலையில், அணையில் இருந்து செய்யாற்றில் விநாடிக்கு 490 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
கலசப்பாக்கம் அருகே 22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 18.04 அடியாக பராமரிக்கப்படுகிறது. அணையில் 60.802 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 15 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், அணையில் இருந்து செய்யாற்றில் விநாடிக்கு 35 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. படைவீடு அருகே 62.32 அடி உயரம் உள்ள செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் 55.76 அடியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அணையில் 221.590 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 83 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், அணையில் இருந்து கமண்டல நிதியில் விநாடிக்கு 70 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
மூழ்கும் சென்னியம்மன் கோயில்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நான்கு அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணையாறு, செய்யாறு, கமண்டல மற்றும் கமண்டல நாக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் கிராம மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். செங்கம் அடுத்த நீப்பத்துறையில் தென்பெண்ணையாற்றில் அமைந்துள்ள சென்னியம்மன் கோயில், வெள்ள பெருக்கில் மூழ்கி வருகிறது. இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் இறங்கவும், குளிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது என எச்சரித்துள்ளது.
52 ஏரிகள் நிரம்பியது: திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் 697 ஏரிகள் உள்ளது. இதில் செங்கம் பகுதியில் அதிகபட்சமாக 23 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது. இதேபோல் போளூர் பகுதியில் 11 ஏரிகளும், செய்யாறு மற்றும் கீழ்பென்னாத்தூர் பகுதியில் தலா 7 ஏரிகளும், தண்டராம்பட்டு மற்றும் ஆரணி பகுதியில் தலா 2 ஏரிகளும் என மாவட்டத்தில் மொத்தம் 52 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளது. மேலும் 75 – 100 சதவீதம் வரை 18 ஏரிகளும், 50 – 75 சதவீதம் வரை 90 ஏரிகளும், 25 – 50 சதவீதம் வரை 209 ஏரிகளும், 1 முதல் 25 சதவீதம் வரை 319 ஏரிகளும் நிரம்பி உள்ளது. இதில் 9 ஏரிகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT