Published : 25 Oct 2024 07:05 PM
Last Updated : 25 Oct 2024 07:05 PM
நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகள் ஒருநாள் கனமழைக்கே தாக்குப்பிடிக்காமல் மரணப் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பேராபத்துடன் பயணித்து வருகின்றனர். கனமழை காரணமாக கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், நகர, கிராம சாலைகள் என பரவலாக சாலைகள் பழுது ஏற்பட்டுள்ளதால் பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
அதுவும் சிறிய மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் பல இடங்களில் சாலைகளில் ஜல்லிகள் பெயர்ந்து பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர, மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. குறிப்பாக, நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. அதிலும் பாதாளச் சாக்கடை திட்டம், குடிநீர் திட்டங்களுக்காக பலமுறை தோண்டப்பட்டு மூடப்பட்டு தார் வைக்கப்பட்ட சாலைகளில் அபாய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று முதல் பெய்த கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அரைகுறையாக முடிக்கப்பட்ட சாலைகள் உருக்குலைந்து சின்னா பின்னமாகின.
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு விருந்தினர் மாளிகை முன்பு ஒரு மாதத்திற்கும் மேலாக பாதாளச் சாக்கடை குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது. ஆனால், முறையாக மண்ணை இறுக்கி தார் வைக்கப்படாததால் ஒரு நாள் கனமழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் அந்தப் பகுதியில் அபாய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பயணிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அபாய பள்ளத்தில் பயத்துடன் வாகனங்களில் மக்கள் பயணிக்கின்றனர். இதுபோன்றே நாகர்கோவில் மாநகராட்சியின் பல சாலைகளும் காணப்படுகிறது. சாலைப் பணிகளை ஒப்பந்தம் எடுப்போர் அவற்றை தரமாக செய்துமுடிக்க துறை அதிகாரிகள் உரிய முறையில் கண்காணித்தால் மட்டுமே இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT