Last Updated : 25 Oct, 2024 05:30 PM

 

Published : 25 Oct 2024 05:30 PM
Last Updated : 25 Oct 2024 05:30 PM

குமரியில் இடைவிடாது கொட்டிய கனமழை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய இடைவிடாது கொட்டிய கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து எந்நேரம் வேண்டுமானாலும் உபரிநீர் திறந்துவிடப்படலாம் என்பதால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் குளிரான தட்பவெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக, நேற்று மாலையில் இருந்து விடிய விடிய இடைவிடாது கனமழை கொட்டியது. இன்று மதியம் 2 மணி வரை தொடர்ச்சியாக பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 110 மிமீ மழை பெய்தது. தக்கலையில் 106 மிமீ., இரணியலில் 98, குளச்சலில் 76, குருந்தன்கோட்டில் 72, மயிலாடியில் 65, பூதப்பாண்டி, அடையாமடையில் தலா 62, மாம்பழத்துறையாறு, ஆனைக்கிடங்கில் தலா 59, பெருஞ்சாணியில் 55, புத்தன்அணையில் 54, நாகர்கோவிலில் 52, சுருளோட்டில் 51, முள்ளங்கினாவிளையில் 48 மிமீ மழை பதிவானது.

விடிய விடிய கொட்டிய கனமழையால் ரப்பர் பால்வெட்டும் தொழில், மீன்பிடி தொழில், தென்னை சார்ந்த தொழில், கட்டுமானத் தொழில் உட்பட பல தொழில்கள் முடங்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மலையோர கிராமங்களான மோதிரமலை, கிழியாறு, குற்றியாறு, கல்லாறு, காளிகேசம், கீரிப்பாறை, கரும்பாறை, பேச்சிப்பாறை, சிற்றாறு பகுதிகளில் கனமழையால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் மலை கிராமங்களில் போக்குவரத்து முடங்கின. கனமழையால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர்.

நாகர்கோவில் மாநகர பகுதியில் பெய்த மழையால் கோட்டாறு, அசம்புரோடு, மீனாட்சிபுரம், வடசேரி, ஒழுகினசேரி, வெட்டுர்ணிமடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழை காரணமாக எந்ததெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு இருக்கிறதோ அப்பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், மழைநீர் விரைவில் வடிவதை உறுதிசெய்யவும் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

செம்மாங்குளம், அவ்வை சண்முகம் சாலை மற்றும் கோட்டாறு ரயில்வே சாலை பகுதிகள் வழியாகச் செல்லும் நீர்நிலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், தண்ணீர் தேங்கும் பகுதிகளில் அடைப்பு ஏற்படின், அடைப்புகளை துரிதமாக அகற்றி, தண்ணீர் சீராக செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை இதுநாள் வரை வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. இருப்பினும் பேரிடர் காலங்களில் அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்வதுடன், பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கெட்டுக்கொள்வதாக ஆட்சியர் அழகுமீனா தெரிவித்தார்.

அத்துடன், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு மற்றும் திருவட்டார் வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை 1, சிற்றாறு அணை 2 ஆகிய அணைகளின் கொள்ளளவை விட நீர் அதிகமாகும்போது அணைகளிலிருந்து உபரிநீர் திறந்து விடப்படும். எனவே, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவதோடு, சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் ஆற்றுப்படுகைளில் குளிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டுமென ஆட்சியர் கேட்டுகொண்டுள்ளார்.

இன்று பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42.51 அடியாகவும், பெருஞ்சாணி அணை 64.66 அடியாகவும், சிற்றாறு ஒன்று அணை 15.32 அடியாகவும் இருந்தது. எந்நேரமும் அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட வாய்ப்பிருப்பதால் அணைப்பகுதிகளில் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார பிரிவு பொறியாளர் குழுவினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். மழையால் கன்னியாகுமரி உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா மையங்கள் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x