Last Updated : 25 Oct, 2024 05:01 PM

 

Published : 25 Oct 2024 05:01 PM
Last Updated : 25 Oct 2024 05:01 PM

விஸ்வரூபம் எடுக்கும் திருநள்ளாறு திருலோகநாதர் கோயில் நில மோசடி - பின்னணி என்ன?

பார்வதீஸ்வரர் கோயில், திருலோகநாதர் கோயில்

காரைக்கால்: காரைக்கால் பார்வதீஸ்வரர் கோயில் நில மோசடி புகார் தொடர்பான விசாரணை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ள நிலையில், திருநள்ளாறு திருலோகநாதர் கோயில் நில மோசடி தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

காரைக்கால் கோயில் பத்து பகுதியில் பார்வதீஸ்வரர் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான நிலத்தில் அரசு மனைப்பட்டா தருவதாகக்கூறி முறைகேட்டில் சிலர் ஈடுபட்டுவருவதாக துணை ஆட்சியராக(வருவாய்) இருந்த ஜி.ஜான்சன் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புகார் அளித்திருந்தார். இந்த நிலத்தில் யாருக்கும் மனைப்பட்டா வழங்கவில்லை, இதற்காக யாரிடமும் பணம் தரவேண்டாம் எனவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால் கோயில் நிலம் தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளின் கையெழுத்துடன் போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டிருந்ததுடன், அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களுக்கு இதில் உள்ள தொடர்பு, லட்சக்கணக்கான ரூபாய் கை மாறியிருப்பது தொடர்பான விவரங்கள் கசிந்த நிலையில், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் பிரச்சினையை தீவிரமாக கையில் எடுத்ததால் மாநில அரசும், காவல் துறையும் இவ்வழக்கில் தீவிர கவனம் செலுத்த தொடங்கின.

இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஜே.சி.பி.ஆனந்த் (எ) ஆனந்த்குமார் உள்ளிட்ட பலர் மீது காரைக்கால் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில், புகார் அளித்த துணை ஆட்சியர் ஜான்சனே கைது செய்யப்பட்டதுடன், இடைத்தரகர்களாக செயல்பட்ட சிவராமன், திருமலைராஜன், காரைக்கால் நகராட்சியில் பணிபுரியும் நில அளவையர் ரேணுகாதேவி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ஜான்சன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது, அதிகாரிகள் உடந்தையாக இருந்தது உள்ளிட்ட சதி திட்டங்கள் தெரியவந்தன. இதையடுத்து நிலத்தை விற்க பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது?, மொத்தம் எவ்வளவு தொகை யார் யாரால் பெறப்பட்டுள்ளது? என்ற ரீதியில் விசாரணையின் போக்கு நகர்ந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, திருநள்ளாறு தக்களூர் பகுதியில் உள்ள தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான திருலோகநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மோசடியாக விற்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் எஸ்.பி.எஸ்.நாதன்(எ) அமுர்தீஸ்வரன் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

பார்வதீஸ்வரர் கோயில் நில மோசடி விவகாரத்தை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள கோயில் நில விவகாரங்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் உத்தரவிட்டார். இந்நிலையில் தக்களூர் திருலோக நாதசுவாமி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பான விசாரணை சூடு பிடித்துள்ளது.

இதுகுறித்து காவல் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, இக்கோயிலுக்கு தானமாக எழுதி வைக்கப்பட்ட சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான திருநள்ளாறு பகுதியில் உள்ள நிலங்களை, திருச்சியில் வசித்து வரும் நித்தியானந்தம் என்பவர் தனக்கு சொந்தமானது என்று கூறி, சில அரசியல் பிரமுகர்களுக்கு விற்றுள்ளார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் கோயில் நிலம் என தெரிந்தே வாங்கினார்களா அல்லது தெரியாமல் வாங்கினார்களா என்பது விசாரணையில்தான் தெரிய வரும் என்கின்றனர். இதையடுத்து நித்தியானந்தத்தை போலீஸார் கைது செய்தனர்.

இதனிடையே, இந்த நிலங்களுக்கான பட்டா மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டபோது திருநள்ளாறு வட்டாட்சியராக இருந்த ராஜகோபால், உதவி வட்டாட்சியர் குருபாதம்(தற்போது ஓய்வு பெற்றுவிட்டனர்) ஆகியோரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பட்டாக்களில் உள்ள கையெழுத்து தங்களுடையதுதான் என்று தெரிவித்துள்ளதுடன், வழக்கமான அலுவலின்படிதான் அவற்றிலும் கையெழுத்திட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், அப்போது வட்டாட்சியராக இருந்து, தற்போது புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குநராக உள்ள சக்திவேலை, திருநள்ளாறு காவல் நிலையத்துக்கு வரவழைத்து கடந்த 22-ம் தேதி 2-வது முறையாக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, பட்டாக்களில் உள்ளது தனது கையெழுத்து இல்லை என தெரிவித்துள்ளார். இதனால், இதுதொடர்பாக அறிவியல் ரீதியான சோதனைகளை மேற்கொள்ள போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. துணைநிலை ஆளுநரின் நேரடி கண்காணிப்பில் இவ்விரண்டு விசாரணைகளும் நடைபெறும் நிலையில், மேலும் சில அதிகாரிகள் கைது செய்யப்படுவதுடன், அரசியல் ரீதியான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x