Published : 25 Oct 2024 04:36 PM
Last Updated : 25 Oct 2024 04:36 PM

அமைந்தகரை சமுதாய நலக்கூட சுவரில் பெரிய ஆலமரம்: எந்த நேரமும் இடிந்து விழும் ஆபத்து

சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலம் (8) வார்டு 108-ல் அமைந்தகரையில் அமைந்துள்ளது சமுதாய நலக்கூடம். மிகவும் பழமையான இந்த சமுதாய நலக்கூடத்தில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் பக்கவாட்டு சுவரின் மையப் பகுதியில் ஆலமரம் ஒன்று வளர்ந்து பெரியதாக நிற்கிறது. இதனால் பக்கவாட்டு சுவர் பெரிதும் சேதமடைந்துள்ளது. அதனை சீரமைக்கவோ அல்லது அந்த மரத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய சுற்றுச் சுவர் அமைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து அமைந்தகரையை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: சமுதாய நலக்கூடத்தின் பக்கவாட்டு சுவரின் மையப் பகுதியில் ஆலமரம் ஒன்று வளர்ந்து பெரிதாக நிற்கிறது. இதனால் பக்கவாட்டு சுவர் வலுவிழந்துள்ளது. அதனால் எந்த நேரத்திலும் இடிந்துவிழும் அபாயம் இருக்கிறது. சமுதாய நலக்கூடத்தில் ஏதாவது நிகழ்ச்சி நடைபெறும்போது பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தால் விபரீதம் நிகழும் அபாயமும் இருப்பதை மக்கள் பிரதிநிதியும், அதிகாரிகளும் உணர வேண்டும்.

மேலும், இந்த சுற்றுச்சுவரையொட்டி சென்னை மாநகராட்சி குப்பைத் தொட்டிகளை வைத்துள்ளனர். அதனால் அக்கம் பக்கத்தினரும் அங்கு வந்து குப்பைகளை கொட்டிவிட்டு போகிறார்கள். பல நேரங்களில் தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி வழியும். மழை பெய்துவிட்டால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசும். பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் இந்த குப்பை தொட்டிகளை வேறு இடத்துக்கு கொண்டு போக வேண்டும். இல்லாவிட்டால் அவற்றை மிகவும் தூய்மையாக பராமரிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து 108-வது வார்டு கவுன்சிலர் சுந்தர்ராஜனிடம் கேட்டபோது, “மழை முடிந்த பிறகு அதனை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x