Last Updated : 25 Oct, 2024 04:26 PM

 

Published : 25 Oct 2024 04:26 PM
Last Updated : 25 Oct 2024 04:26 PM

குற்றவியல் அரசு வழக்கறிஞர் நியமனம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

மதுரை: குற்றவியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களை நிரப்பியதற்காக தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் குற்றவியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள அரசு வழக்கறிஞர் பணியிடங்களை நிரப்பக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, “பெரும்பாலான குற்றவியல் நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிகிறது. இவ்வாறு இருந்தால் குற்றவியல் நீதிபரிபாலனம் முடங்கும் நிலை ஏற்படும். எனவே, தமிழகம் முழுவதும் குற்றவியல் நீதிமன்றங்களில் எத்தனை அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது, இந்த காலியிடங்களை நிரப்ப அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வாதிடுகையில், “உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து 14 அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. காலியாக உள்ள 5 குற்றவியல் துணை இயக்குநர் பணியிடங்களை 2003-ம் ஆண்டின் அரசாணை அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

இதையடுத்து நீதிபதி, “நீதிமன்ற உத்தரவின்படி குறுகிய காலத்தில் காலியாக உள்ள குற்றவியல் வழக்கறிஞர்கள் பணியிடங்களை நிரப்பிய அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. இதற்காக குற்றவியல் துறை இயக்குநரும், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருமான அசன் முகமது ஜின்னாவை நீதிமன்றம் பாராட்டுகிறது. துணை இயக்குநர் பதவி உயர்வால் ஏற்படும் பணியிடங்களையும் ஒரு மாதத்தில் நிரப்பி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x