Published : 25 Oct 2024 04:15 PM
Last Updated : 25 Oct 2024 04:15 PM
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இவற்றில் 40 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் கடந்த 1978-ம் ஆண்டு கொடுக்கப்பட்டன. மீதமுள்ள 11 வார்டுகள் ஊராட்சிகளாக இருந்து காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டவை. அதனால் அந்தப் பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு இல்லாமல் இருந்தது. அந்த பகுதிகளில் புதிதாக பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க ரூ.254 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் 180.243 கி.மீ தூரத்துக்கு பாதாள சாக்கடைக்கான குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. பிரதான குழாய்கள் மட்டும் 14.101 கி.மீ தூரத்துக்கு செல்கிறது. அடைப்பு ஏற்பட்டால் ஆங்காங்கே சுத்தம் செய்வதற்கு வசதியாக 9 மீட்டர் தூரத்துக்கு ஒன்று என மேல்நோக்கிய ஆளிறங்கும் அளவிலான குழாய்கள் மொத்தம் 7,437 அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 15,652 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கெனவே உள்ள 40 வார்டுகளில் 21 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டு 46 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இந்த பாதாள சாக்கடை இணைப்பில் அவ்வப்போது பிரச்சினை வருகிறது. பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருகிறது.
இதனை சரி செய்ய தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்தம் ஏற்படுத்தி மாநகராட்சி சரி செய்து வருகிறது. ஆனாலும் பல்வேறு இடங்களில் அடிக்கடி கழிவுநீர் வெளியேறுவதால் பொதுமக்கள் பெரும் இன்னல்களையும், சுகாதார சீர்கேடுகளையும் சந்தித்து வருகின்றனர்.
எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டாலும், பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி அழுத்தம் அதிகரித்து ஆளிறங்கும் தொட்டிகள் வழியாக வேறொரு இடத்தில் தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் எந்த இடத்தில் அடைப்பு உள்ளது என்பதை அறியவே சில நாட்கள் ஆவதால் ஒரு இடத்தில் கழிவுநீர் வெளியேறினால் அதனை சரி செய்ய 4 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை ஆகிறது. அதுவரை கழிவுநீர் வெளியேறி தூர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இந்த பழைய கட்டமைப்பு மற்றும் புதிதாக அமைக்கப்படும் பாதாள சாக்கடை கட்டமைப்பு ஆகியற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, மஞ்சள் நீர் கால்வாய் வழியாக நத்தப்பேட்டை ஏரியில் கொண்டுவிட உள்ளனர். பாதாள சாக்கடை கழிவுநீர் நத்தப்பேட்டை ஏரியில் விடப்படுவதால் ஏரிநீர் மாசுபட்டு விவசாயம் பாதிப்பதாக விவசாயிகளும் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேரு கூறியதாவது: புதிய பாதாள சாக்கடை அமைக்கும் பணியுடன் பழைய பாதாள சாக்கடை இணைப்புகளை சரி செய்ய வேண்டும். காஞ்சிபுரம் மாநகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இந்த கழிவுநீரையும், புதிதாக அமைக்கப்படும் பாதாள சாக்கடை கழிவுநீரையும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்க வேண்டும்.
அந்த சுத்திகரிப்பு நீர் கால்நடைகளுக்கு புல் வளர்ப்பதற்கு பயன்படுத்த வேண்டும். இதற்கான திட்டங்கள் ஏற்கெனவே மாநகராட்சியிடம் உள்ளன. அந்த நீரை நத்தப்பேட்டை ஏரிக்குள் விடக்கூடாது. சாயப்பட்டறைகளை அமைத்து சிலர் கழிவுநீரை பாதாள சாக்கடைக்குள் விடுகின்றனர்.
சாயப்பட்டறைகள் அனைத்தையும் கீழ் அம்பி பட்டு பூங்கா பகுதிக்கு மாற்ற வேண்டும். சாயப்பட்டறை கழிவுகளை பாதாள சாக்கடையில் விட அனுமதிக்கக் கூடாது. அதேபோல் பாதாள சாக்கடை கழிவு நீர் தனியாக கொண்டு செல்லப்பட வேண்டும். அதனை மஞ்சள் நீர் கால்வாயில் விடக் கூடாது என்றார்.
இதுகுறித்து மாநாகராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது, காஞ்சிபுரத்தில் உள்ள பழைய பாதாள சாக்கடை இணைப்புகளை சரி செய்ய ரூ.250 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. அந்த நிதி வந்தால் மட்டுமே பணிகளை தொடங்க முடியும். புதிய பாதாள சாக்கடைக்கு உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.254 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் ரூ.68 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT