Published : 25 Oct 2024 04:08 PM
Last Updated : 25 Oct 2024 04:08 PM
புதுச்சேரி: தீபாவளியையொட்டி புதுச்சேரியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் துறை மூலம் இலவச வேட்டி, சேலைக்கு பதிலாக 1.27 லட்சம் பேருக்கு தலா ரூ.1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதை இன்று முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அப்போது, வரும் பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை தரப்படும் என்று துறை அமைச்சர் கூறினார்.
புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை மூலம் இலவச வேட்டி சேலைக்கு பதிலாக பணம் வழங்கும் திட்டத்தின் கீழ் தீபாவளிக்கு 18 வயது பூர்த்தியடைந்த பழங்குடியினர், ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் துணி வாங்க தலா ரூ.1000 வீதம் நிதி உதவி வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. முதல்வர் ரங்கசாமி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 612 பயனாளிகளுக்கு ரூ.12.76 கோடி நிதி உதவி வழங்கப்பட உள்ளது. புதுச்சேரியிலுள்ள புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் பயனாளிகள் உள்ளனர். மாஹே பிராந்தியத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் இல்லை. இதனால் 3 பிராந்தியகளிலும் இந்த நிதி உதவி ஆனது பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இன்று முதல் வரவு வைக்கப்படும்.
இது குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் கூறுகையில், "கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தீபாவளிக்கு ரூ.500 கூட தரமுடியவில்லை. 43 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள். பட்ஜெட்டில் அறிவித்தப்படி வரும் 2025 பொங்கல் பண்டிக்கைக்கு ரூ.1000-க்கு பதில் வேட்டி, சேலை வழங்கப்படும். தற்போது கால அவகாசம் இல்லாததால் இந்த ஆண்டு தீபாவளிக்கு பணம் வழங்கப்படுகிறது.” என்றார்.
முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "ரேஷன் கடைகளில் இலவச அரிசி வரும் நவம்பர் 14 அல்லது 15ம் தேதி முதல் வழங்கப்படும். தற்போது ரேஷன் கடைகள் இல்லாத இடங்களில் தீபாவளி அரிசி, சர்க்கரை உள்ளிட்டவை பள்ளிகள் அல்லது அங்கன்வாடிகள் மூலம் தரப்படும். அடுத்த மாதம் அனைத்து ரேஷன் கடைகளும் முழுமையாக இயங்கும்.
எங்கெங்கு தீபாவளி இலவச அரிசி சர்க்கரை கிடைக்கும் என்று அறிவிக்க வேண்டியது இல்லை. ரேஷன் கடையை சென்று பார்த்தாலே போதும் ரேஷன் கடை இல்லாவிட்டால் அருகில் உள்ள பள்ளி அல்லது அங்கன்வாடியில் தரப்படும்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT