Published : 25 Oct 2024 04:06 PM
Last Updated : 25 Oct 2024 04:06 PM

தேவர் ஜெயந்தி: மதுரை வங்கியிலிருந்து பெறப்பட்ட தங்கக் கவசம் பொறுப்பாளரிடம் ஒப்படைப்பு

தங்க கவசம்

மதுரை: பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் அணிவிக்கப்படும் தங்கக் கவசத்தை இன்று மதுரை அண்ணாநகரிலுள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையிலிருந்து பெற்ற அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அதை தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் ஒப்படைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா அக்.28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேவர் ஜெயந்தியை ஒட்டி முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திலுள்ள உள்ள தேவரின் உருவச் சிலைக்கு அதிமுக சார்பில் தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது. தங்கக் கவசம் மதுரை அண்ணாநகரிலுள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை பெட்டகத்தில் உள்ளது. தங்கக் கவசம் ஆண்டு தோறும் வங்கிக் கிளையிலிருந்து எடுக்கப்பட்டு தேவர் ஜெயந்தியின்போது முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும்.

அதற்காக அதிமுக பொருளாளர், தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் பெயரில் தனி வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, அதிமுக பொருளாளர் மற்றும் நினைவிட பொறுப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்டு தங்கக் கவசத்தை பெறுவது வழக்கம். அதன்படி இன்று மதுரை அண்ணாநகரிலுள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளைக்கு தங்கக் கவசத்தை பெறுவதற்காக அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் ஆகியோர் இன்று மதியம் 12.20 மணிக்கு வந்தனர்.

இருவரும் கையெழுத்திட்டு தங்கக் கவசத்தை பெற்றனர். அவர்களிடம் வங்கி கிளை மேலாளர் அனிருத், தங்க கவசத்தை வழங்கினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன் மற்றும் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் வங்கிக் கிளையிலிருந்து தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் மதியம் 1 மணிக்கு பசும்பொன் கிராமத்திற்கு தங்கக் கவசத்தைக் கொண்டு சென்றனர்.

பின்னர் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் உத்தரவின்படி சட்ட விதிகளின்படி பொருளாளர் என்ற முறையில் தேவர் தங்கக் கவசத்தை ஒப்படைத்துள்ளோம். தேவர் குருபூஜை முடிந்து நவ.1-ம் தேதி தங்கக் கவசம் மீண்டும் வங்கியில் ஒப்படைக்கப்படும்.

சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் அதிமுக கூட்டணி பற்றி அறிவிக்கப்படும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து நின்றால் அதிமுகவும் தனித்து நிற்கும். கூட்டணி குறித்து இப்போது ஜோசியம் சொல்ல முடியாது. டி.டி.வி.தினகரனுக்கும், அதிமுகவுக்கும் சம்பந்தம் கிடையாது அதிமுகவைப்பற்றி பேச தினகரனுக்கு எந்தத் தகுதியும் கிடையாது.

கூட்டணிக்குள் விவாதம் நடக்கும், விரிசல் இல்லை என பெரிய ஜோசியக்காரர் போல் தமிழக முதல்வர் பேசியுள்ளார். திமுக கூட்டணிக்குள் என்ன விவாதம் நடந்தாலும் விரிசல் ஏற்படுவது உறுதி என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவரது எண்ணப்படியே நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x