Published : 25 Oct 2024 03:52 PM
Last Updated : 25 Oct 2024 03:52 PM

“தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதால் உதயநிதி பதவி விலகுவாரா?” - எல்.முருகன்

எல்.முருகன் (இடது); உதயநிதி ஸ்டாலின் (வலது)

சென்னை: “உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளதே அதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்? தான் கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா? அல்லது உதயநிதி ஸ்டாலினை மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்து விடுவாரா?” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது. இதையடுத்து முதலில் இருந்து மீண்டும் பாடியுள்ளனர். ஆனால் இரண்டாம் முறை பாடப்பட்டபோதும் தவறாகவே பாடியுள்ளனர். மொத்தத்தில் நிகழ்ச்சியில் சரியான முறையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை.

டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, அதற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொலைக்காட்சி சார்பில் மன்னிப்பு கேட்டது. ஆனாலும் கூட, அதை வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர் எவ்வாறு கீழ்த்தரமான அரசியலை செய்தனர் என்பதை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தனராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டதற்காக அவர் மீது இனவாத கருத்துக்களை அள்ளித் தெளித்து பதவி விலகுமாறு வற்புறுத்தியவர் மு.க.ஸ்டாலின். மத்திய அரசு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தற்போது தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளதே அதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்? தான் கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா? அல்லது தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலினை மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்து விடுவாரா? தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விஷயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மீதே பழி சொல்லும் தந்தையும் மகனும், தாங்கள் வழிநடத்தும் தமிழக அரசின் நிகழ்ச்சியில், அவர்கள் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டால் பொறுப்பேற்க மாட்டார்களா?

இதை வைத்து அவர்கள் மீது இனவாத கருத்துக்களை அள்ளி தெளித்தால் அது சரியானதாக இருக்க முடியுமா? நிகழ்ச்சிக்கு பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பியதற்கு, “இந்த விவகாரத்தை பெரிய பிரச்சினையாக்கி விடாதீர்கள்” என மழுப்புகிறார் உதயநிதி ஸ்டாலின். ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியை பெரும் பிரச்சினையாக்கி எவ்வாறு அரசியல் செய்தோம் என்பதை தந்தையும் மகனும் இப்போதாவது உணர்ந்து பார்க்க வேண்டும்.

ஆளுநர் நிகழ்ச்சியை வைத்து தொடர்ந்து விவாதங்கள் நடத்திய ஊடகங்கள் இதுபற்றி பேசுமா? ஆளுநருக்கு ஒரு அளவுகோல்- உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு அளவுகோலா? சாதாரணமாக நடந்த தவறை சுட்டிக்காட்டி திருத்தச் சொல்வது தான் நல்ல தலைவர்களுக்கு அழகு. இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி இனவாத அரசியல் செய்வது தான் போலி திராவிட மாடல். இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் ஊடகங்களும் உணர வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x