Published : 25 Oct 2024 02:19 PM
Last Updated : 25 Oct 2024 02:19 PM

உதயநிதி தலைமையில் நடந்த அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: டிடிவி தினகரன் கண்டனம்

டிடிவி தினகரன்

சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ளது. ஆளுநருக்கு எதிராக கொந்தளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது என்ன பதில் சொல்லப் போகிறார்? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எகஸ் தளத்தில், “சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டு முறை தவறாக பாடப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக கூறி அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் மீது இனவாத கருத்துக்களை முன்வைத்த முதல்வர், ஆளுநரின் வயது மற்றும் பொறுப்பைக் கூட உணராமல் பொதுவெளியில் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்த துணை முதலமைச்சர் தற்போது நடைபெற்றிருக்கும் தமிழ்த்தாய் அவமதிப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

துணை முதலமைச்சர் தலைமை தாங்கிய நிகழ்வில் அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டிருப்பதன் மூலம், தமிழ்ப்பற்று மற்றும் தாய்மொழிப்பற்று எனும் திமுக அரசின் கபட நாடகம் அம்பலமாகியுள்ளது.

மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற வரிகளுக்கு ஏற்ப தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ஏற்பட்டிருக்கும் அவமதிப்பை சாதாரண நிகழ்வாக கடந்து செல்லாமல், அதற்கு காரணமானவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து முறையான பயிற்சி பெற்றவர்களை வைத்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x