Published : 25 Oct 2024 10:36 AM
Last Updated : 25 Oct 2024 10:36 AM
“அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் வாயிலாக அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ரூ.5,000 வீதம் ஊக்கத் தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபாவளி திருநாளுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அமைப்பு சாரா தொழிலாளர்களும், அவர்களுக்கும் கீழாக உள்ள தொழிலாளர்களும் அத் திருநாளைக் கொண்டாட கையில் பணமில்லாமல் தடுமாறுவது வருத்தமளிக்கிறது. தீபாவளிக்காக ஊக்கத்தொகை மற்றும் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என்று அமைப்பு சாரா தொழிலாளர்கள் விடுத்த வேண்டுகோள்கள் அரசின் செவிகளில் விழாதது ஏமாற்றமளிக்கிறது.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வாரத்தில் அதிகபட்சமாக 3 அல்லது 4 நாட்கள் மட்டும் தான் வேலை கிடைக்கிறது. அதைக் கொண்டு தான் அவர்கள் வாரம் முழுவதும் வாழ்க்கை நடத்த வேண்டும். அதற்கே அவர்களுக்கு வருமானம் போதாது எனும் நிலையில், அவர்களால் தீபாவளிக்காக புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வாங்குவதென்பது சாத்தியமற்ற ஒன்று. எந்த ஆதரவும் இல்லாத அவர்களுக்கு தமிழக அரசு தான் துணையாக இருக்க வேண்டும்.
புதுவையில் தீபாவளி திருநாளையொட்டி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா 5000 ரூபாயும், அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்திருக்கிறார். அனைத்து செலவுகளுக்கும் மத்திய அரசை நம்பியிருக்கும் புதுவை அரசால் இதைச் செய்ய முடியும் போது தமிழக அரசால் ஏன் செய்ய முடியாது? என்ற வினா எழுகிறது. அந்த வினா மிகவும் நியாயமானது தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தீபாவளி திருநாளைக் கொண்டாடுவதை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். அதை நிறைவேற்றும் வகையில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் வாயிலாக அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ரூ.5,000 வீதம் ஊக்கத் தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT