Published : 25 Oct 2024 05:50 AM
Last Updated : 25 Oct 2024 05:50 AM
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்காக 10 பிரிவுகளில் 22 விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு தகுதியானவர்கள் வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.
உலக மாற்றுத் திறனாளிகள் தினம் வரும் டிச.3-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நடைபெறும் விழாவில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாகப் பணிபுரிந்தவர்கள், நிறுவனங்களுக்கு மாநில விருதுகள் வழங்கப்பட உள்ளன. அந்த வகையில், சிறந்த பணியாளர், சுயதொழில் புரிபவர் பிரிவில் 10 விருதுகளும், ஹெலன் கெல்லர் விருது பிரிவில் 2 விருதுகளும், சிறந்த ஆசிரியர், சிறந்த சமூகப்பணியாளர், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவைபுரிந்த தொண்டு நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர் ஆகிய பிரிவுகளில் தலா ஒரு விருதும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநர், நடத்துநர், பொதுக் கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பிரிவு ஆகிய பிரிவுகளில் தலா 2 விருதுகள் என மொத்தம் 22 விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதுடன் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
இந்த விருதுக்கு தகுதியானவர்கள் வரும் 28-ம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகர்களை வட சென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் வழங்க சென்னை மாவட்ட ஆசியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT