Published : 24 Oct 2024 08:58 PM
Last Updated : 24 Oct 2024 08:58 PM
மதுரை: "அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை பற்றி அவதூறு தெரிவித்தால் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிடுவோம்" என்று அதிமுக சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், பன்னீர்செல்வம் பற்றி பேசியதை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பற்றி பேசியதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பொய்யான செய்தி பரப்பி வருவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் புகார் தெரிவித்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார் கூறும்போது, "அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தி, கம்பீரத்தை குறைத்து இருக்கிற பன்னீர்செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் சொல்லும் விதமாக கடந்த 21ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் நான் பேசினேன். அதில், அதிமுக 2021 சட்டமன்ற தேர்தலில் கே.பழனிசாமி முதல்வர் வேட்பாளராக களத்தில் நிற்கும் பொழுது 75 இடங்களில் வெற்றி பெற்றோம். மீதம் 43 தொகுதிகளில் 1,92,000 வாக்குகள் பெற்றிருந்தால் மீண்டும் ஆட்சியை அமைத்திருப்போம். அந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்கு துரோகம் செய்தது ஓ.பன்னீர்செல்வம் தான்.
அவர் ஒருங்கிணைப்பாளராக இருந்த பொழுது தேனி மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும், போடி தொகுதியில் மற்றும் வெற்றி பெற்று மூன்று தொகுதிகளில் தோல்வி தந்தார். குறிப்பாக ஆண்டிப்பட்டி தொகுதியில் எம்ஜிஆர் அமெரிக்கா மருத்துவமனையில் இருந்து படுத்துக்கொண்டே வெற்றி பெற்றார். சோதனையான காலக்கட்டத்தில் ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். அந்த ஆண்டிப்பட்டி தொகுதியில் கூட சூழ்ச்சி செய்து தோல்வியை தான் பன்னீர்செல்வம் கட்சிக்கு தந்தார். இப்படி பன்னீர்செல்வம் சூழ்ச்சி செய்ததால் 43 தொகுதிகளில் 1,92,000 வாக்குகளில் நூழையில் ஆட்சி பறிபோனது.
நன்றி, விசுவாசம் குறித்து அவர், பழனிசாமிக்கு பாடம் எடுக்க அவசியம் இல்லை. நானும் கிளை கழக செயலாளருக்கு மகனாக பிறந்து மாணவரணி செயலாளர், இளைஞர் அணி செயலாளர், ஜெ., பேரவை செயலாளர், சிவகங்கை ராம்நாடு, விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர், மூன்று துறைக்கு அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆகிய பதவிகளை பெற்றேன். எங்கள் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தொடர்ந்து இது போன்ற விஷம பிரச்சாரத்தை மேற்கொண்டால், இது போன்ற நபர்களை தூண்டிவிடும் பன்னீர்செல்வத்தின் வீட்டை முற்றுகையிடுவோம்" என்று ஆர்.பி உதயகுமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT