Published : 24 Oct 2024 08:23 PM
Last Updated : 24 Oct 2024 08:23 PM
புதுச்சேரி: இலவச அரிசி திட்டத்தில் 2 மாதங்களுக்கான பணம் வெள்ளிக்கிழமை வங்கியில் செலுத்தப்படுகிறது. இதற்காக ரூ.32.41 கோடியை அரசு செலவிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்ததால் பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வந்தது. தற்போது ரேஷன்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் முதல் அரிசி தரவுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு அரிசி பணம் பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்த முடிவு எடுத்தனர்.
இதுகுறித்து புதுவை அரசின் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சக இயக்குநர் அலுவலகம் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பு: “புதுவை அரசு, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.600 வீதம் இரண்டு மாதங்களுக்கு ரூ.1,200 எனவும் வழங்கப்படுகிறது.
மேலும், மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.300 வீதம் இரண்டு மாதங்களுக்கு ரூ.600 எனவும் வழங்கப்படுகிறது. அதன்படி அவரவர் வங்கிக் கணக்கில் நாளை (அக்.25) வரவு வைக்கப்பட உள்ளது. இதன்மூலம் 3 லட்சத்து 35 ஆயிரத்து 595 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைய உள்ளனர். அதில் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்கள் 2 லட்சத்து 4 ஆயிரத்து,616 பேரும், மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்கள் 1 லட்சத்து 30 ஆயிரத்து 979 பேரும் உள்ளனர். அதற்காக புதுவை அரசு ரூ.32.41 கோடி செலவிடுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT