Last Updated : 24 Oct, 2024 07:31 PM

 

Published : 24 Oct 2024 07:31 PM
Last Updated : 24 Oct 2024 07:31 PM

அறநிலையத் துறை, வக்பு வாரியம் போல் கிறிஸ்தவ சொத்துகளை நிர்வகிக்க தனி சட்ட வாரியம்: ஐகோர்ட் யோசனை

மதுரை: இந்து, இஸ்லாமிய நிறுவனங்களை நிர்வகிக்க தனி அமைப்பு இருப்பது போல் கிறிஸ்தவ நிறுவனங்களை நிர்வாக தனி சட்ட வாரியம் ஏற்படுத்த வேண்டும் எனவும், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தாளாளர் நியமனம் தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு: ''கல்லூரி தாளாளராக ஒருவரை நியமிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், பேராசிரியர்கள் சிலர் புகார் அளித்ததால், அந்த நியமனத்துக்கு சிஎஸ்ஐ ஆயர் தடை விதித்துள்ளார். தாளாளர் தேர்வு விவகாரத்தில் சிஎஸ்ஐ விதிகள் முறையாக பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை. ஒரு சில நபர்கள் சிஎஸ்ஐ நிர்வாகத்தின் பைலாக்கள் / விதிகளை பின்பற்றாமல் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளது தெரியவருகிறது.

பல வழக்குகளில் ஆலய சொத்துகள் முறைகேடாக நிர்வாகம் செய்யப்படுவதும், நிதி தவறாக பயன்படுத்தப்படுவதும் தெரிகிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்க, அவ்வப்போது தற்காலிக நடவடிக்கையாக நிர்வாகிகளை நியமிப்பது என்பது வழக்கமான நடைமுறையாகும். அதே நேரத்தில் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய நேரம் வந்துள்ளதாக நீதிமன்றம் கருதுகிறது.

கிறிஸ்தவ நிறுவனங்கள், கல்வி, மருத்துவமனை போன்ற பல பொதுப் பணிகளைச் செய்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. இந்நிறுவனங்களின் சொத்துகள் மற்றும் நிதி பாதுகாக்கப்பட வேண்டும். இந்து மற்றும் இஸ்லாமிய அறக்கட்டளைகள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டவை. அவற்றை பாதுகாக்க அறநிலையத் துறை, வக்பு வாரியம் உள்ளன. ஆனால், கிறிஸ்தவ அமைப்புகளுக்கு அத்தகைய விரிவான ஒழுங்குமுறை எதுவும் இல்லை.

கிறிஸ்தவ நிறுவனங்களை மேலும் பொறுப்புடன் செயல்பட வைக்க, நிர்வாக விவகாரங்களை ஒழுங்கமைக்க ஒரு சட்டபூர்வ வாரியம் இருக்க வேண்டும். எனவே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலர் மற்றும் தமிழக அரசின் முதன்மைச் செயலரை நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கில் சேர்க்கிறது. இருவரும் கிறிஸ்தவ நிறுவனங்களை முறைப்படுத்த சட்டபூர்வ வாரியத்தை ஏற்படுத்துவது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நவ.18-க்கு ஒத்திவைக்கப்படுகிறது'' என்று நிதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x