Published : 24 Oct 2024 06:33 PM
Last Updated : 24 Oct 2024 06:33 PM
திருவாரூர்: தேசிய கல்விக் கொள்கையின் வாயிலாக கல்வித்துறையின் உள் கட்டமைப்புகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசினார்.
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பள்ளி உளவியலில் ஆய்வு நோக்கங்கள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் இன்று நடந்தது. மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். கருத்தரங்கை தொடங்கி வைத்த மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் பேசியது: ''மனநல விழிப்புணர்வை உள்ளடக்கிய கல்வி நடைமுறைகள் பல்கலைக்கழகம் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகளால் நாடு முழுவதும் சென்று சேர்ந்துள்ளது. 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
2013-ல் பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா 2024-ல் 5-வது இடத்தில் உள்ளது. 2027-ல் பொருளாதாரத்தில் 3-வது இடத்தை அடைய நாம் முன்னேறி வருகிறோம். கல்வித்துறையில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு புதிய பல்கலைக்கழகங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் வாயிலாக கல்வியும், கல்வித்துறையின் உள் கட்டமைப்புகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது.
இந்திய இளைஞர்கள் சர்வதேச அளவில் போட்டி போட்டு வருகின்றனர். தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைத்தலில் முக்கிய பங்கு வகிக்கும் பள்ளி உளவியல் வாயிலாக ஒருங்கிணைந்த கல்வி சூழலை உறுதி செய்வதற்கான முக்கியப் படியாக இந்த கருத்தரங்கம் திகழ்கிறது. மேலும், பன்முகத் தன்மை கொண்ட கல்வியை, மன ஆரோக்கிய முயற்சி மற்றும் வேலைவாய்ப்பு சந்தை தேவைகளுக்கு ஏற்ப, மாணவர்களை உருவாக்குவதையே தேசிய கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது'' என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT