Published : 24 Oct 2024 06:36 PM
Last Updated : 24 Oct 2024 06:36 PM
விழுப்புரம்: தவெக மாநாட்டுத் திடலில் பெரியார், காமராஜ், அம்பேத்கர் மற்றும் விஜய் கட் அவுட் வைக்கப்படுகிறது. சுதந்திரப் போராட்ட தியாகிகளான வேலுநாச்சியார், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் படங்களும் இடம்பெறவுள்ளதாக, அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27-ம் தேதி மாலை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டு ஏற்பாடுகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டு வாயில் முகப்பிலிருந்து மாநாட்டு திடல் வரை வழியில் இருபுறமும் 35 அடி உயரத்தில் கொடி கம்பம் நடப்பட்டு அதில் 15 அடி உயரத்தில் தவெக கொடி பறக்க விடப்பட்டது.
மாநாட்டு திடலில் என்னென்ன சிறப்பம்சங்கள் என மாநாட்டு திடலை நிர்வகிக்கும் தவெக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “தொண்டர்கள் மாவட்ட வாரியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக வரவுள்ள வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு, வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1 மணி முதல் 3 மணிக்குள் மாநாட்டுக்கு வருபவர்கள் வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநாட்டுத் திடலில் பெரியார், காமராஜ், அம்பேத்கர் மற்றும் விஜய் கட் அவுட் வைக்கப்படுகிறது. சுதந்திரப் போராட்ட தியாகிகளான வேலுநாச்சியார், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் படங்களும் இடம்பெறவுள்ளது. மாநாட்டு திடலுக்கு மேலே தாழ்வாக சென்ற மின் கம்பிகள் இழுத்து கட்டப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் நாளில் இங்கு மின் விநியோகம் இருக்காது. அதிக பவர் கொண்ட ஜெனரேட்டர்கள் மூலம் மாநாட்டிற்கு தேவையான மின்சாரத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
அழைப்பிதழ் இல்லை? - தவெக மாநாடு அழைப்பிதழ் இன்னும் வெளியாகவில்லை. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட தவெக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “மாநாட்டுக்கு அழைப்பிதழ் என தனியாக அச்சடிக்கப்பட்டதாக தெரியவில்லை . யார் யார் பங்கேற்பார்கள் என்பது எங்களுக்கும் தெரியவில்லை. எல்லாமே பரம ரகசியமாகவே உள்ளது. அழைப்பிதழில் பங்கேற்பவர்களின் பெயரை குறிப்பிட்டு, அவர்கள் மாநாட்டுக்கு வராவிட்டால் விமர்சனங்களை எதிர்கொள்வது மிக கடினம்” என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT