Published : 24 Oct 2024 04:43 PM
Last Updated : 24 Oct 2024 04:43 PM

நாட்டு கால்வாய் பிரச்சினைக்கு முதல்வர் தீர்வு காண வேண்டும்: திருநீர்மலை மக்கள் எதிர்பார்ப்பு

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருநீர்மலையில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நாட்டு கால்வாய் பிரச்சினை மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீர்வளத்துறையினர் கோரிய ரூ.53 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிடவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருநீர்மலை ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் சுப்புராயன் நகர், சரஸ்வதிபுரம் விரிவு, ரங்கா நகர் வழியாக செல்லும் நாட்டு கால்வாய் என்ற மழைநீர் கால்வாய் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது. மழை காலத்தில் திருநீர்மலை ஏரியின் உபரி நீர் நாகல்கேணி, பம்மல் பகுதிகளின் வெள்ளம் இக்கால்வாய் வழியாக ஆற்றுக்கு செல்கிறது. ஆனால், இந்த கால்வாய் முறையாக பராமரிக்கப்படவில்லை.

இதனால், ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளம் ஏற்பட்டு சரஸ்வதிபுரம், சுப்புராயன் மற்றும் ரங்கா நகர் பகுதிகளை சூழ்ந்து விடுகிறது. 2015-ம் ஆண்டு இப்பகுதிகளில், 6 அடி உயரத்துக்கு வெள்ளம் தேங்கியது. ஒவ்வொரு மழையின் போதும் இப்பகுதிகள் பாதிக்கப்படுவதால் இந்தக் கால்வாயை முறையாக தூர்வார வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நீர்வளத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நாட்டு கால்வாயில், ஆகாய தாமரை மட்டும் அகற்றப்படுகிறது. நாட்டு கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், தூர்வாராமல், சேதமடைந்த கால்வாய் பகுதியை சீரமைக்காமல் இருப்பதால் மழைநீர் குடியிருப்பு பகுதிக்கு செல்கிறது.

ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய் பக்கவாட்டின் சுவரை உயர்த்தி, தூர்வார வேண்டுமென அப்பகுதி குடியிருப்புவாசிகள், 2015-ம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுமக்களே சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முயலும்போது, உள்ளூர் அரசியல்வாதிகள், அதிகாரிகளை வைத்து மிரட்டுவதாக குற்றம்சாட்டுகின்றனர். மேலும், நாட்டு கால்வாய் விவகாரத்தில் முதல்வர் தலையிட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பா.சரவணன் கூறியதாவது: 2015-ம்ஆண்டு மழையின்போது எங்கள் பகுதி முதல்முதலாக கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது நாட்டு கால்வாயை சீரமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரையில் பக்கவாட்டு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

பா.சரவணன்

ஆனால் அது ஏற்கப்படவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மழையின்போதும் நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம். இதனால் உயிரிழப்புகள் இல்லை என்றாலும், பொருட்சேதம் அதிக அளவில் ஏற்படுகிறது. ஏரியிலிருந்து வரும் உபரி நீர் நேரடியாக அடையாறு ஆற்றுக்கு செல்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகிறது. இதற்கு காரணம், கால்வாயில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளதுதான். பெயரளவே தூர்வாரும் பணி நடக்கிறது.

மேலும், கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப் படாமலும், கரைகள் பல இடங்களில் சேதம் அடைந்தும் காணப்படுகிறது. இதற்கு நிரந்தரமாக தீர்வு காண வேண்டுமெனில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி, கரையை உயர்த்தி, கான்கிரீட் கரை அமைக்க வேண்டும். கால்வாய் குறுகலாக உள்ள இடங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் அவை அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் நில எடுப்பு செய்து கால்வாயை அகலப்படுத்த வேண்டும்.

இதேபோல் வண்டலூர்-மீஞ்சூர் அவுட்டர் ரிங் சாலையில் உள்ள கல்வெர்ட்களையும் அகலப்படுத்த வேண்டும். மேலும், நாட்டு கால்வாய் இடையே சரஸ்வதிபுரம் 4-வது மற்றும் 2-வது தெருவை இணைக்கும் வகையில் சிறு பாலம் அமைக்க வேண்டும்.

இது சம்பந்தமாக நீர்வளத்துறை, எம்எல்ஏ, எம்.பி., ஆட்சியர், முதல்வர் தனி பிரிவு என பல அலுவலகங்களுக்கு, பல முறை மனு கொடுக்கப்பட்டுள்ளது. யாருமே கண்டுகொள்ளவில்லை. இதனால் முதல்வர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, நீர்வளத்துறை கோரிய ரூ.53 கோடி நிதியை ஒதுக்கி, பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீர்வளத்துறையினர் கூறியதாவது: திருநீர்மலை ஏரி மற்றும் நாட்டு கால்வாயை சீரமைக்க ரூ.53 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏரியில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்றி, தூர்வாரி, பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் வசதியுடன் கால்வாயை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. நாட்டு கால்வாயில் ஆக்கிரமிப்புகள் இல்லை.

கலுங்கு பகுதியில் மட்டுமே ஆக்கிரமிப்பு உள்ளது. சில இடங்களில் குறுகலாக இருப்பது உண்மைதான். நில எடுப்பு செய்ய வேண்டுமெனில் அதிகம் செலவாகும். அரசு நிதி ஒதுக்கினால் மட்டுமே அனைத்து பணிகளையும் செய்து முடிக்க முடியும் என்றனர்.

அரசு விரைவில் நிதி ஒதுக்கும்: எம்எல்ஏ நம்பிக்கை - பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதியிடம் கேட்டபோது, ‘ஏரியை சீரமைத்து படகு குழாம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் நாட்டு கால்வாயை சீரமைக்கவும் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏற்கெனவே சட்டப்பேரவையில் பேசி இருக்கிறேன். எம்எல்ஏக்களின், 10 கோரிக்கைகளில் திருநீர்மலை ஏரி குறித்தும் இடம்பெற்றுள்ளது. அரசு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யும். மக்களின் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும்’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x