Published : 24 Oct 2024 12:32 PM
Last Updated : 24 Oct 2024 12:32 PM
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கட்டிடத்தில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர். பின்னர், அதுவெறும் டைல்ஸ் வெடிப்பு என்பதை பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர்.
புனித ஜார்ஜ் கோட்டையில், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை உள்ளது. மொத்தம் பத்து தளங்களைக் கொண்டது இக்கட்டிடம். இதில், தமிழக அரசின் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வழக்கம்போல், ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். கட்டிடத்தின் முதல் தளத்தில், வேளாண்மைத்துறை சார்ந்த அலுவலகம் இயங்கி வருகிறது. அப்போது அந்த தளத்தின் தரைப்பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், அங்கிருந்து உடனடியாக வெளியேறினர். முதல் தளத்தைத் தொடர்ந்து, கட்டிடத்தின் பத்து தளங்களில் இருந்த பணியாளர்களும் அங்கிருந்த வெளியேறினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை மற்றும் பொதுப்பணித் துறையினர், சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்தனர். தரையில் இருந்த டைல்ஸ்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தனர். பின்னர், முதல் தளத்தின் டைல்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள வெடிப்புதான், எனவே பதற்றம் அடைய தேவையில்லை, பணியாளர்கள், உள்ளே சென்று பணியாற்றலாம் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து, தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன் கூறுகையில், “புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்துக்கு தீயணைப்புத் துறையின் பாதுகாப்பு சான்றிதழ் உள்ளது. ஆனால், தலைமைச் செயலக கட்டிடத்துக்கு அத்தகைய சான்றிதழ் எதுவும் இல்லை. எனவே, இந்த இரண்டு கட்டிடங்களையும் முழுமையாக ஆய்வு செய்து, இனிவரும் காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.
அமைச்சர் பேட்டி: இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, “கட்டிடத்தின் உறுதித் தன்மையில் எந்த பிரச்சினையும் இல்லை. கட்டிடம் உறுதியாகவே உள்ளது. உடனடியாக பொறியாளர்களை அழைத்து வந்து ஆய்வு செய்துவிட்டோம்.14 வருடத்திற்கு முந்தைய பழைய டைல்ஸ் என்பதால் விரிசல் ஏற்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT