Published : 24 Oct 2024 06:15 AM
Last Updated : 24 Oct 2024 06:15 AM

அதிக திடக்கழிவுகளை உருவாக்குவோர் கழிவு மேலாண்மை விதிகளை மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை: அதிக திடக்கழிவுகளை உருவாக்குவோர், கழிவு மேலாண்மை விதிகளை மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுரு பரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2019-ன் படி, நாளொன்றுக்கு 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவுகள் உருவாகும் நிறுவனங்கள் அதிக திடக்கழிவு உருவாக்குவோராக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசுத் துறைகள் அல்லது மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் துறைகளின் கட்டிடங்கள், மாநில அரசுத்துறைகள் அல்லது அதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பிற கல்வி நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், சந்தைகள், வழிபாட்டு தலங்கள், மைதானங்கள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் ஆகியவை அதிக குப்பைகளை உருவாக்கினால், மேற்கூறிய வகையில் வரும்.

மக்கும், மக்காத குப்பை மேலும், 5 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட அல்லது நாளொன்றுக்கு 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவுகளை உருவாக்கும் அனைத்து குடியிருப்புகள், சந்தைகள் மற்றும் இதர நிறுவனங்கள் தங்கள் வளாகங்களில் உற்பத்தியாகும் திடக்கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தெடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இக்கழிவுகளை தனித்தனியாக சேகரித்து, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட குப்பை சேகரிப்பாளர்களிடம் அல்லது மறுசுழற்சி செய்பவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

மக்கும் கழிவுகள் முடிந்தவரை தங்களது வளாகத்துக்குள்ளேயே உரமாக்கல் அல்லது பயோ-மெத்தனேஷன் முறையில் பதப்படுத்தி அகற்ற வேண்டும். எஞ்சிய செயல்படுத்த முடியாத கழிவுகளை உள்ளாட்சி அமைப்புகளின் அறிவுறுத் தலின்படி, அங்கீகரிக்கப்பட்ட திடக்கழிவு சேகரிப்பாளர்கள் அல்லது நிறுவனங்களிடம் வழங்க வேண்டும்.

மேற்கூறிய அதிக திடக்கழிவுகளை உருவாக்குவோர், வீட்டுக் கழிவுகளை சேகரிப்பதற்காக தெருக்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் குப்பையை கொட்டக்கூடாது. இவர்கள், திடக்கழிவு மேலாண்மையை சரியாக பின்பற்றாமல் விதிமீறல்களில் ஈடுபட்டால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x