Published : 24 Oct 2024 07:21 AM
Last Updated : 24 Oct 2024 07:21 AM
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் பேசியது: தமிழகம் முழுவதும் 234 மாவட்டச் செயலாளர்களை அறிவிக்க இருக்கிறோம். இவர்களோடு சேர்த்து மாவட்ட நிர்வாகமும் முழுமையாக அறிவிக்கப்பட இருக்கிறது. மாவட்ட நிர்வாக பொறுப்புகளை ஆய்வு செய்து தலைமைக்கு பரிந்துரை செய்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூன்று முதல் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட இருக்கிறது. இந்தக்குழு ஆய்வு செய்து ஒவ்வொரு பொறுப்புக்கும் மூன்று பெயர் களை தலைமைக்கு பரிந்துரை செய்யும். அப்படி பரிந்துரை செய்யப்படும் மூவரில் ஒருவர் ஒருபொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
பிறகு, ஒன்றிய - நகர பொறுப்பாளர்களுக்கான பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டு முறையாக அறிவிக்கப்படும். இதைத் தொடர்ந்து மாநில நிர்வாக பொறுப்புகள் அறிவிக்கப்படும். இப்பணிகள் எல்லாம் மேற்கொள்வதற்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் தேவைப்படும். சமூக ஊடகங்களில் விருப்பம்போல் உட்கட்சி விவகாரங்களை எழுதுவது, கடுமையான விமர்சனங்களை எழுதுவது கட்சியின் நலனுக்கு எதிராக முடியும். சமூக ஊடகங்களை அறிவுப்பூர்வமாக கட்சி நலனுக்கும் மக்கள் நலனுக்கும் உகந்த வகையில் பயன்படுத்த வேண்டும். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமாகவே ஆட்சி அதிகாரத்தை நோக்கி நகர முடியுமே தவிர, சமூக ஊடகங்களில் நான் தான் முதல்வர் என்று சொல்வதால் ஆகிவிட முடியாது. எனவே, கட்சியை வலுப்படுத்த புதிய சக்திகளை சேர்க்க முயற்சிக்க வேண்டுமே தவிர, காழ்ப்புணர்ச்சி கொண்டோருக்கு எதிர்வினையாற்ற வேண்டாம். இவ்வாறு பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT