Published : 24 Oct 2024 07:07 AM
Last Updated : 24 Oct 2024 07:07 AM

பாஜகவில் 27 லட்சம் சிறுபான்மையினர் உறுப்பினர்களாக இணைந்ததாக தமிழிசை தகவல்

சென்னை: பாஜகவில் 27 லட்சம் சிறுபான்மையினர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

பாஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை தி.நகர் கமலாலயத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழிசை, மாநில துணை தலைவர்கள் எம்.சக்கரவத்தி, கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது தமிழிசை கூறியதாவது: பாஜகவில் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், அவர்களுக்கென்று சில உறுப்பினர்களை சேர்த்து, கட்சிக்கு ரூ.100 கட்டணம் செலுத்தி அவர்கள் தீவிர உறுப்பினர்களாக மாறவேண்டும்.

இந்த முறை 27 லட்சம் சிறுபான்மையினர் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்திருக்கிறார்கள். எனவே பாஜகவை சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று சொல்ல முடியாது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற செல்வாக்கை விட, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். 2019-ம் ஆண்டு தேர்தலோடு ஒப்பிடுகையில், 10 சதவீத வாக்குகளை இழந்திருக்கிறது. கூட்டணி கட்சிகள், திமுகவுடன் இணக்கமான சூழ்நிலையில் இல்லை. தமிழகத்தில் அதிக மழை பெய்தும், எதுவும் சேமிக்கப்படாமல் அனைத்தும் கடலில் கலந்து வீணாகி விட்டது. சரியான நீர் மேலாண்மை இல்லாததால், பல ஏரி, குளங்கள் வறண்டு இருக்கிறது. தமிழகத்தில் அரசு துறைகளில் வெறும் விளம்பரம் மட்டுமே நடக்கிறது. உதயநிதி போன்றோர் வந்த பிறகு, திமுக மூத்த தலைவர்கள், தங்களுக்கு சீட் கிடைக்குமா என்று கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுஉள்ளனர்.

திமுக கட்சிக்குள்ளேயே குழப்பம் இருக்கிறது. பிஎஸ்என்எல் லோகோ காவி நிறத்தில் மாறியதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அறப்போர் இயக்கம் ஊழல்குற்றச்சாட்டு முன்வைத்திருக்கிறது. அவர் மறுப்பு தெரிவித்தாலும், இதுகுறித்து விசாரிக்கவேண்டும். வயநாட்டில் பிரியங்கா போட்டியிடுவதை அவர்களது கூட்டணி கட்சிகளே ஏற்றுக்கொள்ளவில்லை. நடிகர் விஜய்யை பார்த்து தமிழக அரசு பயந்து விட்டது. அதனால் தான் மாநாட்டுக்கு இடம் கொடுப்பதில் இருந்து அனைத்துக்கும் தடங்கல் செய்து வருகின்றனர். இவ்வாறு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x