Published : 24 Oct 2024 07:01 AM
Last Updated : 24 Oct 2024 07:01 AM

தமிழகத்தில் கைம்பெண்களுக்காக சிறப்பு நலத்திட்டங்கள்: அரசு வெளியிட்ட அறிக்கையில் பெருமிதம் 

சென்னை: தமிழகத்தில் கைம்பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி சிறப்பாக நடைமுறைப்படுத்துவதுடன், தேவையான நிதியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

‘இந்து தமிழ் திசை' நாளிதழின் தலையங்க பக்கத்தில் கடந்த அக்.22-ம் தேதி ‘கைம்பெண்களின் கண்ணீரைத் துடைப்பது எப்போது?’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருந்தது. இக்கட்டுரை தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம், பல்லாயிரக்கணக்கான பெண்கள் அதிலும் கைம்பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். சமூக பாதுகாப்பு திட்டங்களின்கீழ் உயர்த்தப்பட்ட மாதஓய்வூதியம் ரூ.1,200-ஐ இதுவரை 8 லட்சத்து 10,985 கைம்பெண்கள் பெற்று வருகின்றனர்.

திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தரப்படுகிறது. இதுதவிர அங்கன்வாடி, சத்துணவுத்திட்ட பணியிடங்களில் கைம்பெண்களுக்கு 25 சதவீதம், அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் பணியிடங்களில் 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பல்வேறு துறைகளால் வழங்கப்படும் இலவச வீட்டு மனைத் திட்டத்தில் கைம்பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சமூக நலத்துறையின் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் 91 கைம்பெண்கள் மறுமணம் செய்து உதவித்தொகை பெற்றுள்ளனர்.

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் திட்டத்தில் 7,316 பெண்கள் பயன்பெற்றுள்ளனர். மேலும், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்கள் உள்ளிட்டோருக்காக அரசு சார்பில் நலவாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட செயலி மூலம் 21,344 பேர் உறுப்பினராகி உள்ளனர். கைபேசி இல்லாத கைம்பெண்கள், இ-சேவை மையம் மூலம் விவரங்களை பதிவு செய்ய வசதி செய்யப்பட உள்ளது.

கைம்பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கு, தமிழக அரசு தலா ரூ.1 லட்சம் மானியமாக 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்குகிறது. சுயதொழில் தொடங்க 200 கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கு தலா ரூ.50 ஆயிரம் அரசு மானியம் வழங்க உள்ளது. 6 அரசு சேவை இல்லங்கள், மருத்துவ, உளவியல் உதவி அளிக்க 48 ஒருங்கிணைந்த சேவைமையங்கள் செயல்படுகின்றன. குடும்ப வன்முறையால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 36 மகளிர் தங்கும் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு பல்வேறு சேவை களை கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சிறப்பாக வழங்கி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x