Published : 24 Oct 2024 05:26 AM
Last Updated : 24 Oct 2024 05:26 AM
சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் ரூ.685 கோடி செலவில் 28 பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னை பெருநகரவளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில், திருவிக நகர், கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் ரூ.12.68 கோடியில் மேம்படுத்தும் பணிகள், புரசைவாக்கம், சலவைக் கூடத்தை ரூ.12 கோடி செலவில் நவீனப்படுத்தும் பணிகள், திருவிக நகர் பேருந்து நிலையத்தை ரூ.5.35 கோடியில் மேம்படுத்தும் பணிகள், அகரம், ஜெகந்நாதன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பன்னோக்கு மையத்தில் பகிர்ந்த பணியிடம் அமைக்கும் பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தில், 2023–24, 2024-25 ஆகிய ஆண்டுகளில் வடசென்னை வளர்ச்சித் திட்டம் மற்றும் ஒட்டுமொத்த சென்னை வளர்ச்சித் திட்டம் என 140 பணிகள் நடைபெறுகின்றன. குறிப்பாக வடசென்னை வளர்ச்சித் திட்டத்தில் மட்டும் ரூ.668 கோடி செலவில் 28 பணிகள் நடைபெறுகின்றன.
அதில், பூங்கா மேம்பாடு, கடற்கரை மேம்பாடு சார்ந்த 3 பணிகள், ஏரிகள் மேம்பாடு, பேருந்து நிலையம் மேம்பாடு, குடியிருப்புகள் மேம்பாடு, சந்தை மற்றும் பள்ளிகள் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விளையாட்டு அரங்கம், ரத்த சுத்திகரிப்பு மையம் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட வடசென்னை வளர்ச்சி திட்டப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள மாதிரிகளை பார்வையிட்டு, அதில் இருக்கும் சிறு சிறு குறைகளை சரிசெய்து முழுவீச்சில் அந்த பணிக்குண்டான அரசாணைகள் பெறப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தம் கோரப்பட உள்ளது. வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை பொறுத்தவரை ரூ.5,780 மதிப்பில் 225 பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வடசென்னை வளர்ச்சியில் முதல்வர் தனிக் கவனம் செலுத்தி வாரந்தோறும் நடைபெறும் பணிகளை கேட்டறிந்து ஆய்வு செய்து வருகிறார். பணிகளில் பெரும் பாலானவற்றை இந்தாண்டு டிசம்பருக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இப்பகுதியில், 6 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் விளையாட்டு மைதானம், உடற்பயிற்சிக் கூடம், சிறுவர் விளையாட்டு பூங்கா, பாக்சிங், புட்பால், டென்னிஸ் போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டுள்ளோம்.
தொடர்ந்து, 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் சலவைத் தொழிலாளர்களின் சலவைக் கூடத்தை பார்வையிட்டு அதை மேம்படுத்தும் பணிகளைத் தொடங்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி, வீட்டு வசதித் துறை செயலர் காகர்லா உஷா, சிஏம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT