Published : 24 Oct 2024 05:26 AM
Last Updated : 24 Oct 2024 05:26 AM

100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள்: மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்

தமிழ்நாட்டின் 11 நகரங்களில் தனியார் பண்பலை வானொலி நிலையங்கள் அமைப்பதற்கான ஏல நடைமுறைகள் தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தகவல் ஒலிபரப்பு துறையின் இணை செயலாளர் சஞ்சீவ் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை: பிரதமர் மோடி தலைமையில் 3-வது முறையாக ஆட்சி அமைந்த 100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 11 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 234 நகரங்களில் 730 தனியார் பண்பலை (எப்எம்) வானொலி சேவை தொடங்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் தனியார் எப்எம் வானொலி சேவைக்கு மின்னனு-ஏலம் வாயிலாக ஒதுக்கீடு செய்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் தமிழ்நாடு வர்த்தக சபை, ஆந்திரா வர்த்தக சபை, இந்துஸ்தான் வர்த்தக சபை, தேசிய வர்த்தக சபை உள்ளிட்ட தொழில் கூட்டமைப்புகள் சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையில் 3-வது முறையாக ஆட்சி அமைந்த 100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் ரூ.3.5 லட்சம் கோடி திட்டங்கள் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பானவை. இந்த 100 நாட்களில் நாடு முழுவதும் 730 தனியார் எப்எம் வானொலி சேவை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வானொலி என்பது மிக முக்கியமான தகவல் தொடர்பு சாதனம் ஆகும். சாதாரண மக்களிடம் தகவல்களை கொண்டு போய் சேர்த்து வருகிறது. என்னதான், சமூக ஊடகங்கள் வந்தாலும் தொலைக்காட்சி, வானொலி மீதான மோகம் குறையவில்லை. நாட்டின் வளர்ச்சியில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒலிபரப்பு மேம்பாடு தொடர்பான சர்வதேச உச்சிமாநாடு அடுத்த ஆண்டு பிப்ரவரி 5 முதல் 9-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. எல்லை பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கும் வானொலி தொடர்பான சேவைகளை கொண்டு செல்வதற்காக ரூ.2550 கோடி செலவில் ‘பைன்ட்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x