Published : 24 Oct 2024 12:17 AM
Last Updated : 24 Oct 2024 12:17 AM

“விஜய் பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் தனது வர்ணத்தை காட்டுகிறார்” - எச்.ராஜா விமர்சனம்

திருச்சி: ஆங்கிலேயேர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது, லண்டனிலிருந்தாவது சென்னை ராஜதானியை ஆள வேண்டும் என தீர்மானம் போட்டவர்களை விஜய் தாங்கிப் பிடிப்பார் என்றால், எவ்வளவு பெரிய தேசவிரோத கும்பலை பின்பற்றுகிறார் என்பது மக்களுக்கு தெரியட்டும் என்று எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் எச்.ராஜா திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பாஜக அமைப்புத் தேர்தல் துவங்குவதற்கு முன்பாக தீவிர உறுப்பினர் தேர்வு தொடங்கி உள்ளது. மண்டல்களுக்கு தீவிர உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டு வருகிறது. திமுக 1963-க்கு முந்தைய காலத்துக்கு செல்வதாக உணர்கிறேன். திமுகவின் அயலக அணி போதைப் பொருள் கடத்த மட்டும் வைத்திருப்பதாக எண்ணினோம். பட்டவர்த்தனமாக தேச விரோதமாக செயல்படும் அமைப்பாக அது இருக்கிறது. அந்நிய நாடுகள் கூட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் பகுதி அல்ல என்று காட்டுவது இல்லை.

ஆனால் திமுக அயலக அணி, இந்திய பகுதியாக இல்லாமல் வரைபடம் (மேப்) வெளியிட்டுள்ளனர். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். திமுக மூத்தத் தலைவர்களே சிறுபிள்ளைகள் தலையிடுவதால் சிக்கல்கள் வருவதாக பேசி உள்ளனர். உதயநிதி வந்த பிறகு தரங்கெட்ட கட்சி திமுக என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஒரு வரி விடுபட்டது தொடர்பாக ஆளுநர் பற்றி உதயநிதி ஸ்டாலின் மிக அநாகரீகமாக பேசி உள்ளார். முதல்வர் ஸ்டாலின், நாகரீகமான அரசியலை விரும்புவதாக இருந்தால் உதயநிதியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தை சிதைத்தது திமுக தான்.

இலவச இணைப்புகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்டவையும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. பிரிவினைவாத தேச விரோத தீய சக்திகளின் கைகளில் தமிழகம் சிக்கியிருக்கிறது. வருமான வரித்துறையினர் தங்களுக்கு கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுகவை மீண்டும் பாஜகவுக்கு இழுக்கும் நோக்கத்தில் இந்த சோதனையை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. அதுபோன்று மத்திய அரசுக்கு நோக்கம் இருப்பதுபோல ஊடகத்தினர் கற்பிக்க வேண்டாம்.

தேர்தல் நெருங்க நெருங்க திருமாவளவன் போடும் வேஷங்கள் அதிகமாக உள்ளது. திமுக கூட்டணி உறுதியாக இல்லை என்பதை கூட்டணித் தலைவர்கள் பேசுவதிலிருந்தே தெரிகிறது. வருண பகவான் சென்னையை காப்பாற்றிவிட்டார். ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளது என்பது தவறு. காங்கிரஸ் ஆட்சியில் ஆண்டுக்கு 171 ரயில் விபத்துகள் நடந்துள்ளது. பாஜக ஆட்சி அமைத்து 9 ஆண்டுகளில், ஆண்டுக்கு சராசரியாக 71 விபத்துகள் நடந்துள்ளது.

கோயில் சொத்துக்களை அபகரிப்பது, ஆக்கிரமிப்பது திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளது. தவெக தலைவர் விஜய் பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம், தனது வர்ணத்தை (நிறம்) காட்டிக்கொள்கிறார். அதை வரவேற்கிறேன். ஆங்கிலேயேர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது, லண்டனிலிருந்தாவது சென்னை ராஜதானியை ஆள வேண்டும் என தீர்மானம் போட்டவர்களை விஜய் தாங்கிப் பிடிப்பார் என்றால், எவ்வளவு பெரிய தேசவிரோத கும்பலை பின்பற்றுகிறார் என்பது மக்களுக்கு தெரியட்டும்” இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x