Published : 29 Aug 2014 05:18 PM
Last Updated : 29 Aug 2014 05:18 PM

கடலில் மாயமான 3 பாம்பன் மீனவர்கள் மீட்கப்படுவார்களா?- கடற்படை ஹெலிகாப்டர்கள் மீட்புப்பணியில் ஈடுபடவில்லை என குற்றச்சாட்டு

நெடுந்தீவு அருகே விசைப்படகு முழ்கி நடுக்கடலில் மாயமான மூன்று தமிழக மீனவர்களை நான்காவது தினமாக தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட கடற்பகுதியில் இருந்து கடந்த திங்கட்கிழமை 200க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.

இதில் நேசியான் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு மட்டும் செவ்வாய்கிழமை கரை திரும்பவில்லை . இந்த விசைப்படகில் ஜான்கென்னடி (50) டானியல் (20) வில்சன் (19) எஸ்ரோன் (19) ஆகிய நான்கு மீனவர்கள் இருந்தனர். இதனையடுத்து மாயமான மீனவர்களின் உறவினர்கள் மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

மூன்று நாட்டுப்படகுகளில் நெடுந்தீவு அருகே மாயமான மீனவர்களையும் தேடி கடலுக்குள் தேடும் பணியில் பாம்பன் மீனவர்கள் ஈடுபட்டனர். இதில் புதன்கிழமை காலை நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் ஜான் கென்னடி என்ற மீனவரை மீட்புக்குழு மீனவர்கள் மீட்டு பாம்பனுக்கு கொண்டு வந்தனர். மற்ற மூன்று மீனவர்களை தேடும் பணியில் 30 மீனவர்கள் அடங்கிய மீட்பு குழு மூன்று படகுகளில் நான்காவது நாட்களாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காணாமல் போன மீனவர்களை சந்தித்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கூறியதாவது, கடந்த புதன்கிழமை மீட்பு நடவடிக்கைகளில் கடற்படை மற்றும் கடலோரகாவல்படை ஹெலிகாப்டர் மீட்பு பணிகளை ஈடுபடவில்லை என்பதால் பாம்பன் பாலம் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் வருவாயத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், இலங்கை கடற்படை மூன்று மீனவர்களையும் மீட்டு இலங்கையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தவறான தகவலையளித்து மீனவர்களை ஏமாற்றியுள்ளனர்.

ஆனால் இதுவரை மூன்று மீனவர்களும் மீட்கப்படவில்லை. உரிய நேரத்தில் கடற்படையின் ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டிருந்தால் மூன்று மீனவர்களையும் காப்பாற்றி இருக்க முடியும். அதே சமயம் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களின் மீட்புகுழு தான் ஜான்கென்னடி எனும் மீனவரை காப்பாற்றியுள்ளனர்.

இந்த மூன்று மீனவர்களுக்கும் ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பு, என்றார்.

இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பாம்பன் ஊராட்சி மன்றத் தலைவர் பேட்ரிக், பாம்பன் மீனவர் சங்கத் தலைவர்கள் அருள் மற்றும் ராயப்பன் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x