Last Updated : 23 Oct, 2024 08:01 PM

 

Published : 23 Oct 2024 08:01 PM
Last Updated : 23 Oct 2024 08:01 PM

‘வயநாடு நிலச்சரிவை மனதில் வைத்து மாஞ்சோலை வழக்கில் முடிவு’ - வன ஆர்வலர்கள் வாதம் @ ஐகோர்ட்

மதுரை: வயநாடு நிலச்சரிவை மனதில் வைத்து மாஞ்சோலை வழக்கில் முடிவெடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வன ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற தடை விதித்து, தேயிலை தோட்டத்தை தமிழக அரசின் டான் டீ நிறுவனம் ஏற்று நடத்துவது, தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது, மாஞ்சோலை பகுதியை முழுமையான வனப்பகுதியாக மாற்றுவது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உட்பட பலர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற தடை விதித்து, அனைத்து வழக்குகளையும் வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வில் ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கிருஷ்ணசாமி தரப்பில், "மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, அரசு சார்பில் பயிற்சி அளித்து, அங்கேயே வசிக்க அனுமதிக்க வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை பாம்பே பர்மா கம்பெனி மூடி பல மாதங்கள் ஆகிவிட்டது. தீபாவளி வருகிறது. அங்குள்ள வேலை இழந்த தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் தீபாவளி ஊக்கத் தொகை வழங்க பரிசீலிக்க வேண்டும். பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனியினர் அங்குள்ள தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி விஆர்எஸ் பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

வன ஆர்வலர்கள் தரப்பில், "மாஞ்சோலை வனப்பகுதி புலிகள் காப்பகம் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள அகஸ்தியர் மலை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக உள்ளது. மாஞ்சோலை வழக்கில் கேரளாவில் முண்டக்கல், சூரமலா பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு நடந்த இயற்கை பேரிடரை நினைவில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலை புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள தொழிலாளர்கள் நலன் முக்கியம் தான். அதைவிட சுற்றுச்சூழல் , வனச்சூழல் முக்கியம். தேயிலை வனப்பயிர் கிடையாது. எனவே மாஞ்சோலை பகுதிகளில் மரங்களை நட்டு பாதுகாக்க வேண்டும்" எனக் கூறப்பட்டது.

இதையடுத்து, மாஞ்சோலை வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்காமல், எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. என கூறி விசாரணையை நவ.6ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x