Published : 23 Oct 2024 06:10 PM
Last Updated : 23 Oct 2024 06:10 PM
ராஜபாளையம்: தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு உயிரிழப்பு இல்லாத ஆண்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ராஜபாளையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.23) ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் புதிதாக 19 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளும், முக்கிய நகரங்களில் உள்ள 6 மருத்துவமனைகளை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தவும் ரூ.1018.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் ரூ.30 கோடியிலும், ராஜபாளையத்தில் ரூ.40 கோடியிலும் மருத்துவமனைகளை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ராஜபாளையம் அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் டிசம்பர் 20-ம் தேதிக்குள் முடிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டுமான பணிகள் முடிந்த பின் முதல்வர் தலைமையில் திறப்பு விழா நடைபெறும்.
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. 2012-ம் ஆண்டு 66 பேரும், 2017-ம் ஆண்டு 65 பேரும் உயிரிழந்தனர். அதன்பின் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. கடந்த சில ஆண்டுகளாக டெங்கு பாதித்து ஆண்டுக்கு 10 பேர் வீதம் உயிரிழந்துள்ளனர். அதுவும் வீட்டில் வைத்து சிகிச்சை பெறுதல், போதிய விழிப்புணர்வு இல்லாததால் நிகழ்ந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக முதல்வரின் வழிகாட்டுதலில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து மழைக்காலங்களில் நோய் தொற்று பரவாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 5 மருத்துவ முறைகளுக்கும் ஒரே அளவில் முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கப்படுகிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 1.98 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர், என்று அவர் கூறினார். இந்த ஆய்வின் போது தென்காசி எம்பி ராணி, எம்எல்ஏ தங்கபாண்டியன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் பாபுஜி, தலைமை மருத்துவர் மாரியப்பன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். அதன்பின் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT